
முதலீட்டுத் திட்டங்களில் மிகவும் பாதுகாப்பான திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். இன்றைய சூழலில் சேமிப்பும், முதலீடும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. இதனால் பலரும் முதலீடு செய்வதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எந்த வங்கியில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் (FD) நல்ல தேர்வாக இருக்கும். மேலும் ரூ.5 இலட்சம் வரையிலான முதலீட்டிற்கு ‘டெபாசிட் இன்சூரன்ஸ் உத்தரவாத கழகம் (DICGC)’ பாதுகாப்பு அளிக்கிறது. வங்கிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC ரூ.5 இலட்சம் வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
பொதுவாக பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளை விட அஞ்சல் அலுவலகத்தில் அதிக வட்டி வழங்கப்படும். இருப்பினும் வங்கிகளைப் பொறுத்தவரை பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது.
இதன்படி ‘இந்தஸ் இந்த்’ வங்கியில் தான் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்சமாக 6.65% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தஸ் இந்த் வங்கியில் 3 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு ரூ.1 இலட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.1,19,950 கிடைக்கும். தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்திலேயே இந்த வங்கியில் தான் வட்டி அதிகமாகும்.
அடுத்ததாக ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் 6.6% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்த 2 வங்கிகளில் ரூ.1 இலட்சத்தை முதலீடு செய்தால், 3 வருடங்கள் கழித்து ரூ.1,19,800 கிடைக்கும்.
இதற்கு அடுத்தபடியாக எச்டிஎஃப்சி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிகளில் 6.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த 2 வங்கிகளில் ரூ.1 இலட்சத்தை முதலீடு செய்தால், 3 ஆண்டுகள் கழித்து ரூ.1,19,200 கிடைக்கும்.
கனரா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் 6.25% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1 இலட்சம் பணத்தை முதலீடு செய்தால் 3 ஆண்டு கால முடிவில் ரூ.1,18,750 கிடைக்கும்.
தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் குறைவு தான். யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகிய இரு வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுக்கு 6.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 6.3% வட்டி வழங்கப்படுகிறது. பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு முன், எந்த வங்கியில் எவ்வளவு வட்டி ன்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது.