
திருப்பதி என்றாலே பெருமாளையும், லட்டுவையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு பக்தர்கள் மத்தியில் திருப்பதி லட்டு பிரபலமடைந்துள்ளது. உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு உருவாகி இன்றுடன் 310 ஆண்டுகள் ஆகின்றன. திருப்பதிக்கு செல்வோர் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை வாங்குவது வழக்கம். பாரம்பரியம் மிகுந்த திருப்பதி லட்டுவின் தரத்தை மேம்படுத்த அவ்வப்போது ஐதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்டச்சத்து கழகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.
தினந்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். விஷேச காலங்களில் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். உண்டியல் காணிக்கையும் கோடிக்கணக்கில் வரும். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டை வழங்கியது மத்திய அரசு. அதோடு காப்புரிமையும் இருப்பதால், திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாருலும் லட்டுவை தயாரிக்க முடியாது.
தனித்துவமான சுவையால் பக்தர்களை இழுக்கும் திருப்பதி லட்டு, கடந்த 1715 ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லாத அந்த காலத்தில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏழுமலைகளை கடந்து வர வேண்டிய சூழல் இருந்தது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு வந்துவிட்டு, வீட்டிற்குச் செல்ல பல நாட்கள் ஆகும். ஆகையால் பக்தர்கள் வீட்டிற்கு செல்லும் வரை கெடாத வகையில் ஒரு பிரசாதத்தை அளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
தொட்க்கத்தில் இனிப்பு சுவை மிகுந்த பூந்தி தான் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக கொடுக்கப்பட்டு வந்தது. பிறகு 1803 ஆம் ஆண்டில் பூந்தியை லட்டுவாக மாற்றி விற்பனை செய்யத் தொடங்கியது திருப்பதி தேவஸ்தானம். அதன்பிறகு தான் லட்டு திருப்பதியில் விஷேசமான பிரசாதமாக உருவெடுத்தது. அப்போது இதன் விலை காலணா மட்டுமே. இன்றுடன் திருப்பதியில் பிரசாதம் கொடுக்கப்பட்டு 310 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் திருப்பதியில் லட்டு வடிவில் பிரசாதம் கொடுக்கப்பட்டு 222 ஆண்டுகள் ஆகின்றன.
தற்போது ஒரு பகத்ருக்கு ஒரு லட்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் ஒரு லட்டுக்கு ரூ.50 கொடுத்து பக்தர்கள் வாங்கிக் கெள்ளலாம்.
திருப்பதி லட்டு தற்போது அஸ்தானம், கல்யாணோத்வசம் மற்றும் புரோக்தம் எனும் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 750கிகி எடை கொண்ட அஸ்தானம் வகை லட்டு விஷேச நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கியமானவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதில் முந்திரி, பாதாம் மற்றும் குங்குமப்பூ ஆகியவை சற்று கூடுதலாக இருக்கும்.
திருப்பதியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது கல்யாணோத்வசம் வகை லட்டு தயாரிக்கப்படும். கோயில் உற்சவங்களில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இந்த லட்டு வழங்கப்படும். 175கிகி எடை கொண்ட புரோக்தம் வகை லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருப்பதியில் பெருமாளுக்கு பூஜை செய்ய பல்வேறு விதிமுறைகள் கடைபிடிப்பது போலவே, திருப்பதி லட்டு தயாரிக்கவும் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு எனும் மடப்பள்ளியில் தினந்தோறும் 600 சமையல் கலைஞர்கள் ஷிஃப்ட் முறையில் லட்டுகளை தயாரித்து வருகின்றனர்.
உற்சவ தினங்களில் தினசர் 5 இலட்சம் லட்டுகள் எப்போதும் இருப்பில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாகியும் திருப்பதி லட்டுவின் சுவை மாறாமல் இருப்பது, அதன் தரத்திற்கு முக்கிய சான்றாகும்.