
மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்வோரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசால் பிஎஃப் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். மேலும் நிறுவனமும் பணியாளர் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கும். பிஎஃப் திட்டத்தில் கூட்டு வட்டி முறை கடைபிடிக்கப்படுவதால், ஓய்வு பெறும் காலத்தில் அது மிகப் பெரிய தொகையாக திரும்பக் கிடைக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், பிஎஃப் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் பிஎஃப் கணக்குடன் எல்ஐசி பாலிசியை இணைத்தால், இதன் மூலம் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் இப்படி ஒரு வசதி இருப்பதே ஊழியர்கள் பலருக்கும் தெரியாது.
பிஎஃப் கணக்குடன் எல்ஐசி பாலிசியை இணைத்தல் (Employees Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பணியாளர் உயிரிழந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
எல்ஐசி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைப்பதன் மூலம், பாலிசி பிரீமியத்தை நீங்கள் கட்டத் தவறினால் கூட பிரச்சினை ஏற்படாது. ஏனெனில், பிஃஎப் கணக்கில் இருந்தே பிரீமியம் தொகை கழிக்கப்படும் என்பதால், பாலிசி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
எல்ஐசி பாலிசி மற்றும் பிஎஃப் கணக்கு ஆகிய இரண்டுக்கும் ஒரே நாமினியை நியமித்தால், குடும்பத்தார் கிளைம் செய்வதற்கு மிக எளிதாக இருக்கும்.
ஓய்வுகால பாதுகாப்பு மற்றும் ஆயுள் காப்பீடு என இரண்டு அம்சங்கள் ஒருங்கிணைவதன் மூலம், பணியாளர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
எல்ஐசி மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் ஆகிய இரண்டுமே மத்திய அரசின் கீழ் வருவதால், ஒருங்கிணைந்த சேவையைப் பயனாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிஎஃப் கணக்கில் எல்ஐசி பாலிசியை இணைக்கும் வழிமுறைகள்:
1. முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திறகுச் https://www.epfindia.gov.in/site_en/index.php சென்று, UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
2. பிறகு KYC பகுதிக்குச் சென்று எல்ஐசி பாலிசி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. இதில் பாலிசி நம்பர் மற்றும் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
4. பணியாளர்களின் இந்த விண்ணப்பத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கும்.
5. பிறகு எல்ஐசி பாலிசி பிஎஃப் கணக்குடன் இணைந்து விடும்.