ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பல முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து அவர் அளித்த பதில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேள்வி: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?
முதலமைச்சர் பதில்: பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
கேள்வி: பிரதம மந்திரி பேசும்போது 400 இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து.
முதலமைச்சர் பதில்: மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.
கேள்வி: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்.
முதலமைச்சர் பதில்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.