கின்னஸ் புக்கில் இடம் பெறுமா 2024ஆம் வருடம்?

கின்னஸ் புக்கில் இடம் பெறுமா 2024ஆம் வருடம்?

ந்த வருடம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயக முறைப்படித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னால், எந்த வருடங்களிலும், இதைப் போல பல நாடுகளிலும், ஒரே வருடத்தில் தேர்தல் நடந்ததில்லை.

உலகத்தின் மக்கள் தொகையில், 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நாடுகளில் வசிக்கிறார்கள். உலகம் முழுவதும் உற்று நோக்கிப் பார்க்கின்ற, சில நாடுகளின் தேர்தல் முடிவுகள், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

இந்த வருடம் தேர்தல் நடை பெறப் போகும் சில நாடுகளைப் பார்ப்போம்.

இதுவரை இரண்டு முக்கிய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. பங்தேசத்தில், ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், அவாமி லீக் மறுமுறையும் வென்று, ஷேக் அசினா தொடர்ச்சியாக நான்காவது முறை பிரதமமந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். எதிர்கட்சித் தலைவர்கள் பலர் சிறையில் இருக்க, எதிர்கட்சி பங்கு பெறாத இந்த தேர்தல் நியாயமான முறையில் நடை பெறவில்லை என்கிறது அமெரிக்கா.

தைவானில், ஜனவரி 13இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி மூன்றாவது முறை வென்று, லே சிங்க் தே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றி சீனாவின் கணிப்பு, “ஆபத்தான பிரிவினைவாதி”, “பிரச்சனை செய்பவர்”. சீனாவுடன் சமரசப் பேச்சிற்குத் தயாராக இருக்கும் லெ, சீனாவுடன் இணைவதை ஆதரிக்கவில்லை.. ஆனால், தைவானை இணைக்கத் துடிக்கிறது சீனா.

பாகிஸ்தானில், பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தலைத் தள்ளிப் போட வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. முக்கிய எதிர்கட்சித் தலைவர், இம்ரான் கான் சிறையில் இருக்கிறார். அவர் தேர்தலில் பங்கு பெற தடை இருக்கிறது. அந்தக் கட்சியின் தேர்தல் சின்னமான “கிரிக்கெட் மட்டை”, தேர்தல் சின்னமாக வைத்துக் கொள்ள பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, பாகிஸ்தானில், ஜனநாயக முறைப்படி அரசு அமைவது அவசியமாகிறது.

உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு எனப்படும் இந்தோனேஷியாவில், பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல். 20 கோடி மக்களுக்கும் மேல் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் தேர்தலில், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இந்த தேர்தல் உலகின் மிகப் பெரிய ஒரு நாள் தேர்தல் என்று கருதப்படுகிறது.

அடுத்து ஆவலோடு எதிர்பார்க்கப்படும் மற்றொரு தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருக்கும் இந்தியா நாடாளுமன்ற தேர்தல். தற்போது ஆட்சி செய்யும் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது 26 எதிர்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்பது முக்கியமான கேள்வி.

மே முதல் ஆகஸ்ட் 2024க்குள் நடக்க இருப்பது தென் ஆப்ரிக்கா தேர்தல். நிறவேறி அரசாக இருந்த தென் ஆப்ரிக்கா, அதனிலிருந்து விடுபட்டப் பின்னர் நடக்க இருக்கும் 7வது பொதுத் தேர்தல் இது. ஒரு கட்சி ஆட்சி இல்லாமல், கூட்டணி ஆட்சி அமையும் என்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள்.

ரஷ்யாவில் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில், தற்போதைய அதிபர் விளாடிமீர் புடின், பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். மக்களிடையே, அவருடைய செல்வாக்கு குறைந்துள்ளதா என்பதை அறிய இந்த தேர்தல் உதவும். உக்ரைன் நாட்டில், இந்த வருடம் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் நாட்டில், ரஷ்ய உக்ரைன் இடையிலான போரினால், இராணுவ சட்டம் அமுலில் இருப்பதால், தேர்தல் நடை பெறுமா, ஒத்தி வைக்கப் படுமா என்பது தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
வைஜெயந்திமாலா பாலி: இந்தியாவின் பெருமை மிகு அடையாளம்!
கின்னஸ் புக்கில் இடம் பெறுமா 2024ஆம் வருடம்?

உலகம் எதிர்பார்க்கும் முக்கிய தேர்தல், நவம்பர் 5ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல். முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும், தங்கள் கட்சியின் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் தொண்டர்களின் வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள். குடியரசுக் கட்சியின் டிரம்ப், தேர்தலில் கலந்து கொள்ளலாமா என்பதை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டும். யார் அடுத்த அதிபர் என்பது உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கிரேட் பிரிட்டனில் இந்த வருடம் தேர்தல் நடக்க வேண்டும். தற்போது, இந்திய வம்சாவளியரான, பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக இருக்கிறார். இந்த கட்சி, கடந்த 14வருடங்களாகப் பதவியில் இருக்கிறது. கருத்துக் கணிப்பில் தொழிலாளர் கட்சி முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் நடக்க இருக்கும் மற்ற சில முக்கியமான நாடுகள் மெக்ஸிகோ, இரான், தென் கொரியா, அல்ஜீரியா, உஸ்பெக்கிஸ்தான், வட கொரியா, சிரியா, இலங்கை, ஐரோப்பிய கூட்டமைப்பு. இராணுவப் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில ஆப்ரிக்க நாடுகளிலும் இந்த வருடம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com