
சென்னையைச் சேர்ந்த கே.எஸ்.ஏ.அறக்கட்டளையினர் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை மாநகரத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்த குடிமக்களை கௌரவிக்கும் நோக்கத்துடன். ‘சென்னையின் சாம்பியன்கள்’ விருதுகள் அளித்து வருகிறார்கள். இந்த வருடத்துக்கான விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்தினராக ஓய்வு பெற்ற தென் இந்தியா பிராந்தியத்தின் முன்னாள் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.இந்திரபாலன் வழங்கினார்.
இந்த ஆண்டு, ‘சென்னையின் சாம்பியன்கள்’ விருது பெற்றவர்கள் யார் யார் என்பதை இனி பார்ப்போம்.
‘நண்பர்கள் கிராமிய கலைக் குழு’ - வட சென்னையில் அமைந்துள்ள இந்தக் கலைக் குழு அமைப்பின் தலைவர் என்.தீபன். இவர் பழைமையான ‘பறை ஆட்டம்’ கலை வடிவத்தை மறுபடியும் உயிர்ப்பித்து, அதை பொதுமக்கள் மேடையில் வழங்கி வருகிறார். பறை ஆட்டம் இறுதி ஊர்வலங்களில் மட்டுமே பயன்படுவது என்ற தவறான எண்ணத்தைத் தகர்த்து, தன்னுடைய குழுவுடன், தமிழ்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பயணித்து, இந்தக் கலை வடிவத்துக்கு ஒரு புதிய பாதை அமைத்துள்ளார்.
யுவன் ஆவேஸ் - இயற்கை ஆர்வலரான இவர், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனது ‘பல்லுயிர் டிரஸ்ட்’ மூலம் மாணவர்கள் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கு இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றுள்ளார்.
‘ஃப்ளையிங்க் ஸ்குவாட் ஆம்புலன்ஸ் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் சேவையில் பல்லாண்டு அனுபவம் கொண்டவர். நவீன வசதிகளுடன், நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் மட்டுமில்லாமல், அமரர்களின் உடலை எடுத்துச் செல்லும் அவரது உறவினர்களும் சௌகரியமாகப் பயணம் செய்யும் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தையும் வடிவமைத்துள்ளார்.
டி.டி. ரங்கநாதன் - கிளினிக்கல் ரிசர்ச் ஃபவுண்டேஷன் மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, மறுவாழ்வளிக்கும் ஒரு சிறப்பு மையமாகும். தென்கிழக்கு ஆசியாவின் முன்னோடிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கே தற்காலத் தேவைக்கு ஏற்ப போதைப்பொருள் பழக்கம் மற்றும் சமூக ஊடக அடிமைத் தனத்திற்கும் சிகிச்சை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘அறப்போர் இயக்கம்’ என்பது தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சமூக செயல்பாட்டு இயக்கமாகும். ஆட்சி அமைப்புகளில் உள்ள ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
‘விக்டரி ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்பது எஸ்.கே.தணிகைவேலன் என்பவரால் உருவாக்கப்பட்டது. சமூகத்தின் அடித்தட்டு மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி வழங்குவது இதன் நோக்கமாகும். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலர் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். சிலர் தங்கள் விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ என்ற நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மேகலிங்கம். இவர், ராக்கெட் எரிபொருள் தொழில்நுட்பம், மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மற்றும் 5 கிராம் எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்கள் போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கங்களுடன் பயிற்சி வழங்குகிறார்.
இந்த ஏழு சாம்பியன்களின் வெற்றிக் கதைகளையும் www.championsofchennai.org என்ற இணைய தளத்திலும் காணலாம்.