
கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான லீக் தொடராக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. 2007 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த வீரர்களுக்கான ஏல முறையைத் தொடங்கியது பிசிசிஐ. இதன்படி 2008 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2008 இல் நடந்த முதல் ஐபிஎல் தொடரில் எண்ணற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்திருந்தாலும், பலரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு முக்கியமான சம்பவமும் அரங்கேறியது.
பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் இன்று இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் 10வது போட்டி மொகாலி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 182 ரன்களைக் குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 116 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக செயல்பட்ட ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பஞ்சாப் தரப்பில் ஸ்ரீசாந்த் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டி முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் நேரத்தில் ஹர்பஜன் சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். அப்போது செய்வதறியாது திகைத்த ஸ்ரீசாந்த் கன்னத்தில் கை வைத்தபடி அழுதார். அடுத்து இருவரும் சண்டையிட முற்பட்டதால் சக வீரர்களும், நடுவர்களும் இருவரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட பிசிசிஐ, மும்பை அடுத்து விளையாட இருந்த 11 போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாட தடை விதித்தது. மேலும் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடவும் தடை விதித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகிய இருவரிடமும் இதுகுறித்த கேள்வி பலமுறை எழுப்பப்பட்டது. ஆனால் இருவரும் எதுவுமே சொல்லாமல் சிரித்துக் கொண்டே மழுப்பி விட்டனர். இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இப்போது பார்க்கையில், பலருக்கும் முதல் ஐபிஎல் தொடரில் நடந்த பல விஷயங்கள் நினைவுக்கு வரும். கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தாலும், இனி இதுபோல் நடக்காமல் இருக்க பிசிசிஐ சில விதிகளைக் கடுமையாக்கியது.