
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆண்டுதோறும் பல புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. அதோடு பல முந்தைய சாதனைகளும் முறியடிக்கப்படுகின்றன. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிகள் ஐபிஎல் தொடரில் நீடிப்பதால், பல சாதனைகள் எளிதில் முறியடிக்கப்படுகின்றன. அவ்வகையில் தென்னாபிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை முறியடித்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். அவ்வகையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத டாப் 4 வீரர்களின் பட்டியலை இப்போது காண்போம்.
ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்களே அதிக ரன்களைக் குவிப்பார்கள். ஏனெனில் அனைத்துப் போட்டிகளிலும் அவர்களுக்கான பேட்டிங் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஒரு வீரர் அதிக ரன்களைக் குவிப்பது சாதாரண ஒன்றல்ல. அதிலும் தொடர்ச்சியாக நல்ல பேட்டிங்கை விளையாடுவது இன்னும் கடினமான ஒன்று. அப்படி ஒரு சாதனையைச் செய்தவர் தான் ஏபி டிவில்லியர்ஸ்.
2016 ஆம் ஆண்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ், அந்த ஒரு சீசனில் மட்டும் 687 ரன்களைக் குவித்தார். இந்த சீசனில் பெங்களூர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கோப்பையைக் கைப்பற்றும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் தொடக்க வீரர் அல்லாத ஒரு வீரர், ஒரு ஐபிஎல் சீசனில் குவித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையைப் படைத்தார் டிவில்லியர்ஸ். தற்போது இந்தச் சாதனையைத் தான் சூர்யகுமார் யாதவ் முறியடித்து இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், சீசன் முழுக்க தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மும்பை ஆடிய 16 போட்டிகளிலும் 25 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை படைத்திருந்தார். இதுமட்டுமின்றி தொடக்க வீரர் அல்லாத ஒரு வீரர் குவிக்கும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார். இந்த சீசனில் மட்டும் இவர் 717 ரன்களைக் குவித்து அசத்தியிருக்கிறார்.
கடந்த வருடம் ஃபார்ம் இன்றி தவித்து வந்த சூர்யகுமார் யாதவ், இந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டு வந்துள்ளார். இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் சூர்யகுமார், பல ஆண்டுகளாக மும்பை அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார்.
தொடக்க வீரர் அல்லாத ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஏபி டிவில்லியர்ஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் இருக்கிறார். 2018 இல் டெல்லி அணிக்காக விளையாடிய பந்த், 684 ரன்களைக் குவித்தார். மேலும் இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார் ரிஷப் பந்த். இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் கேன் வில்லியம்ன் உள்ளார். 2018 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சன் 622 ரன்களைக் குவித்தார். இந்த சீசனில் ஐதராபாத் அணியை வில்லியம்சன் கேப்டனாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத டாப் 4 வீரர்கள் பட்டியல்:
1. சூர்யகுமார் யாதவ் - 2025 - 717 ரன்கள்
2. ஏபி டிவில்லியர்ஸ் - 2016 - 687 ரன்கள்
3. ரிஷபம் பந்த் - 2018 - 684 ரன்கள்
4. கேன் வில்லியம்சன் - 2018 - 622 ரன்கள்.