
நாம் புதிதாக வாகனம் ஒன்றை வாங்கும் போது போக்குவரத்துத் துறையால் வாகனத்திற்கு என தனியாக ஒரு நம்பர் ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் நம்பர் ஃபேன்ஸியாக இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் வாகனத்திற்கு ஃபேன்ஸி நம்பர் வேண்டுமெனில் அதற்கென குறைந்தபட்ச கூடுதல் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அப்படி இல்லையெனில் போக்குவரத்துத் துறையால் ஆட்டோமெட்டிக் முறையில் உங்கள் வாகனத்திற்கு ஒரு நம்பர் ஒதுக்கப்படும்.
இந்நிலையில் ஃபேன்ஸி நம்பரை ஒதுக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை புதிதாக ஏல முறையைத் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் ஃபேன்ஸி நம்பரை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதோடு, அரசுக்கும் கூடுதல் இலாபம் கிடைக்கும். இந்த நடைமுறை ஏற்கனவே கேரளா மற்றும் புதுச்சேரியில் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு இனி தமிழ்நாட்டில் ஃபேன்ஸி நம்பர் வாங்கும் நடைமுறை எளிதாகியுள்ளது. பொதுமக்கள் பலரும் ஃபேன்ஸி நம்பரை விரும்பிக் கேட்பதால், ஆன்லைன் வழியாக e-bidding முறையில் அவ்வப்போது ஏலம் நடைபெறும். இதன்மூலம் ஃபேன்ஸி நம்பர் வாங்க இதற்கு முன்பு வரையிருந்த நிலையான கட்டணம் அதிகரித்துள்ளது. ஃபேன்ஸி நம்பருக்கான ஆன்லைன் ஏல முறைக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1,000 இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர்கள் www.parivahan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, தங்கள் இடத்திற்கான RTO-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு இதில் ஃபேன்ஸி நம்பர் ஒதுக்கீட்டிற்கு சூப்பர் ஃபேன்ஸி, செமி ஃபேன்ஸி மற்றும் ரன்னிங் ஃபேன்ஸி ஆகிய 3 வகையான நம்பர்கள் இருக்கும். இதில் ஒன்றை உரிமையாளர் தேர்வு செய்து நுழைவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் ஏலத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொள்கிறார்கள், தேதி, நேரம் மற்றும் அடிப்படை விலை முதல் அதிகபட்ச விலை அனைத்து தகவல்களும் முன்கூட்டியே உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். திட்டமிட்ட நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை ஆன்லைன் ஏலம் நடைபெறும். அடிப்படை விலை நிலவரம் ரூ.2,000 முதல் ரூ.2 இலட்சம் வரை இருக்கும். ஏலத்தின் போது அடிப்படை விலை ரூ.500-ன் மடங்குகளில் உயரும்.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்திற்குள் பணத்தை கட்ட வேண்டும். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஃபேன்ஸி நம்பரை வாகனத்துடன் இணைக்க சம்பந்தப்பட்ட டீலரிடம் தெரிவிக்க வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால் ஆட்டோமெட்டிக் முறையில் தானாகவே வேறொரு நம்பர் ஒதுக்கப்பட்டு விடும்.