
ஆன்லைன் டெலிவரி சேவையில் பிளிப்கார்ட, அமேசான், ஸ்விக்கி, சொமேட்டோ மற்றும் செப்டோ உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணமே டெலிவரி பாய்ஸ் தான். இந்நிலையில் டெலிவரி சேவையில் பணியாற்றும் நபர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் திருப்பூர் அதிகாரி ஒருவர் இதுகுறித்த தகவல்களைப் பகிரிந்துள்ளார்.
ஆன்லைன் டெலிவரி சேவையில் பணியாற்றுபவர்கள் ‘தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில்’ பதிவு செய்திருந்தால் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும். அதில் ஒன்றுதான் ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வாங்கும் திட்டம். பொதுவாக டெலிவரி வேலையில் ஈடுபடுவோருக்கு இருசக்கர வாகனம் தான் பிரதான மூலதனம். ஆகையால் டெலிவரி பணியாளர்களுக்கு உதவும் வகையில் மானிய விலையில் இ-ஸ்கூட்டரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் டெலிவிரி வேலைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் இவர்களின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியம் (Gig Workers Welfare Board) கடந்த 2023 இல் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.
இவ்வாரியத்தில் பதிவு செய்த 2,000 நபர்களுக்கு ரூ.20,000 மானியத்தில் வழங்கப்படும் என 2025-26 பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேலும் இவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 15 லட்சம் டெலிவரி பணியாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இ-ஸ்கூட்டர் குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில் குமரன் கூறுகையில், “அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும் ‘உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் டெலிவிரி பணியாளர்களையும் இணைக்கும் வகையும் ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதோடு தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 2,000 பேருக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி திருப்பூரில் பதிவு செய்திருக்கும் ஆன்லைன் டெலிவிரி பணியாளர்கள் இ-ஸ்கூட்டர் பெற tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அருகிலிருக்கும் தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை 0421-2477276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
டெலிவரி பணியாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.