
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக உலக நாடுகளுக்கு வரி விதிப்பை பல மடங்கு அதிகப்படுத்துவதில் ட்ரம்ப் தீவிரம் காட்டியுள்ளார். தற்போது இந்தியாவுக்கும் 50% வரிவதிப்பை விதித்து பொருளாதாரச் சந்தையை நிலைகுலைய வைத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவுடனான சிக்கல்கள் தீரும் வரையில் எவ்வித வர்த்தகப் பேச்சுக்கும் இடமில்லை என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து, டொன்ல்ட் ட்ரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் பால், நெய் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பியது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்ட போது, இதனால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி மறுத்து விட்டது. இதன் காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை அறிவித்தார் ட்ரம்ப்.
இதுதவிர ஆப்பிள், கோதுமை, சோயாபீன்ஸ், திராட்சை, சோளம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பியது. இதற்கும் மத்திய அரசு மறுத்து விட்டது. மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது எனவும், எந்த வர்த்தமாக இருந்தாலும் அமெரிக்காவுடன் தான் இருக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார்.
இருப்பினும் இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை ரஷ்யாவிடமே தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தது. இதனால் கோபமடைந்த அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரியையும் சேர்த்து, மொத்தம் 50% வரியை அறிவித்து விட்டார்.
அமெரிக்காவின் இந்த பொருளாதார மிரட்டலை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இருப்பினும் அமெரிக்காவின் வர்த்தகப் போரை இந்தியா சமாளித்து விடும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார் ட்ரம்ப். அப்போது 50% வரி விதிப்பிற்குப் பிறகு இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுகள் நடைபெறுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவுடனான சிக்கல்களுக்கு தீர்வு எட்டப்படும் வரை, எவ்வித வர்த்தகப் பேச்சுக்கும் இடமில்லை. ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு அமலில் இருக்கும்” என அவர் தெரிவித்தார்.