
உலகம் ஆவலுடனும், சிறிது எச்சரிக்கையுடனும் 'ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார்?' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருநாள் ஏப்ரல் 2.
'உலக நாடுகள் அனைத்தும் நம்மை வஞ்சனை செய்கின்றன. அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரிகள் விதிக்கின்றன. அவர்கள் நமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, நாம் விதிக்கும் வரிகள் அவர்களின் இறக்குமதி வரிகளை விடக் குறைவு. இந்த நிலை மாறுவதற்கும், அமெரிக்கா மீண்டும் உலகில் முன்னணி நாடாகத் திகழ்வதற்கும், மற்ற நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு, அமெரிக்கா, அவர்கள் விதிக்கும் இறக்குமதி வரிக்கு இணையான பரஸ்பர இறக்குமதி வரி விதிக்க வேண்டும், அதனை அறிவித்து, செயலாக்கும் நாள் ஏப்ரல் 2, 'அமெரிக்காவின் லிபரேஷன் டே' என்று அறிவித்தார்.
சொன்னது போலவே, சுமார் 50 நாடுகளுக்கான இறக்குமதி வரிகள் அறிவிக்கப்பட்டன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரியில் அதிகபட்ச வரி 49%, கம்போடியா, குறைந்தபட்ச வரி இரான் 10%. உதாரணத்திற்கு சில நாடுகளின் இறக்குமதி வரிகளைப் பார்ப்போம்.
இந்தியா – 26%, சைனா – 34%. (சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 20% வரி அமுலில் உள்ளது. ஆக சைனா பொருட்களுக்கான வரி 54% ஆகிறது), ஐரோப்பிய குழுமம் – 20%, பிரிட்டன் – 10%, தைவான் – 32%, ஜப்பான் – 24%, தென் கொரியா – 25%, தாய்லாந்து – 36%, கம்போடியா – 49%, பங்களாதேஷ் – 37%, இலங்கை – 44%, உக்ரைன் – 10%, பாகிஸ்தான் – 29%, மலேசியா – 24%, இரான் – 10%, இந்தோனீஷியா – 32%, வியட்நாம் – 46%. இந்த அட்டவணையில் ரஷ்யா இல்லை. ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டை ஆரம்பித்தப் பிறகு, அமெரிக்கா, ரஷ்யா இடையிலான வர்த்தகம் முழுவதுமாக நின்று விட்டதாகக் கூறலாம்.
சைனா, ஹாங்காங்க் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற குறைந்த விலைப் பொருட்களுக்கு அமெரிக்கா இதுவரை இறக்குமதி வரி விதிக்காமல் இருந்தது. தற்போது, இந்த சலுகையை அமெரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது. இனி, இந்த நாடுகளிலிருந்து வரும் 800 அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் குறைவான விலை உள்ள பொருட்களுக்கு, பொருளைப் பொறுத்து இறக்குமதி வரி விதிக்கப்படும்.
அமெரிக்கா அறிவித்த பரஸ்பர வரிகள் பட்டியலில் மருந்துப் பொருட்கள், தங்கம், வெள்ளி, அமெரிக்காவில் கிடைக்காத தாதுப் பொருட்கள், செம்பு, எஃகு, அலுமினியம், செமிகண்டக்டர், மரச்சாமான்கள் ஆகியவை விடுபட்டுள்ளன. இந்தியா அமெரிக்காவிற்கு 9 பில்லியன் டாலர் (900 கோடி) மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்கிறது. இவைகளுக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும், மின்னணு சாதனங்கள், நகைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இந்தியாவைப் பொருத்த வரை, இந்த வரி விதிப்பு, பெரிய பின்னடைவு இல்லை என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
இத்தாலிய பிரதம மந்திரி ஜியார்ஜியா மெலோனி, இந்த வரிவிதிப்பு தவறு என்று கருத்து தெரிவித்திருக்கிறார். கனடாவின் பிரதம மந்திரி மார்க் கார்னே, இதை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார். ஜப்பான் 'மிகவும் வருந்தத்தக்கது' என்றும், ஆஸ்திரேலியா 'இந்த தேவையற்ற வரிவிதிப்பு அமெரிக்க மக்களை அதிகமாகப் பாதிக்கும்' என்றும், பிரிட்டன், 'இந்த வர்த்தகப் போர் தேவையற்றது' என்றும் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனங்கள், அதற்கான உதிரிப் பொருட்கள் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 25%. இதனால், அமெரிக்காவில் மோட்டார் வாகனங்களின் விலை அதிகரிக்கலாம். காலணிகள், துணி வகைகள் பெரும்பாலும் சைனா, வியட்நாம், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகிறது. இவற்றின் விலை அதிகரிக்கக் கூடும். பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகளிலிருந்து காப்பிக் கொட்டை இறக்குமதி ஆகிறது. காப்பி விலைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வால்மார்ட், காஸ்ட்கோ மற்றும் ஏராளமான வணிக வளாகங்களில் பெரும்பாலான பொருட்கள் அயல் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள். அருங்காட்சியகங்களில், நினைவுப் பொருட்கள் சைனாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள். குழந்தைகளின் விளையாடுப் பொருட்கள், பலகை விளையாட்டுகள், புத்தகங்கள் ஆகியவையும் அதிகமாக சைனா பொருட்கள். கிறிஸ்துமஸ் மின்சார விளக்குகள், ஹாலோவீன் அலங்காரப் பொருட்கள் எல்லாம் அன்னிய நாடுகளிலிருந்து வருபவை. வரி விதிப்பு உயர்வதால், இவற்றின் விலைகள் உயர்வதும், தட்டுப்பாடு ஏற்படுவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.