ஹோர்முஸ் நீரிணையை 'டிரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற பரிந்துரை!

ஹோர்முஸ் நீரிணையை 'டிரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற பரிந்துரை!: ட்ரூத் சோஷியலில் அதிபர் டிரம்ப் பதிவு - சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரியும் சர்ச்சை!
Donald trump
Donald trump
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) "ட்ரம்ப்ட் நீரிணை" (Trump Strait) எனப் பெயர் மாற்ற பரிந்துரைத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) எனும் சமூக வலைப்பதிவு பக்கத்தில் இந்த யோசனையை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஈரான் உடனான தொடர் போர் மற்றும் பல்வேறு உலகளாவிய பதற்றங்களுக்கு இடையில் இந்த விவகாரம் எழுந்துள்ளது தற்போதைய பரபரப்பாக உள்ளது.

அப்பகுதியில் கப்பல்கள் மீது ஈரான் கிட்டத்தட்ட தினமும் தாக்குதல்களை நடத்தி வந்தாலும், அந்த நீர்வழிப்பாதை வாஷிங்டனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதை ஹார்முஸ் நீரிணைக்குத் தனது பெயரைச் சூட்டலாம் என்று யோசனை தெரிவித்ததன் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இப்பாதை மிக முக்கியமானது என்பதால் வெள்ளை மாளிகை மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இந்த புதிய பெயர் கொண்ட வரைபடங்களை பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஈரானின் தெற்கு நகரமான சிரிக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள்ளாகவே டிரம்பின் இந்த யோசனை வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ராயல் கடற்படையுடன் இணைந்த கண்காணிப்பு அமைப்பான 'யுகேஎம்டிஓ' (UKMTO - United Kingdom Maritime Trade Operations), ஹார்முஸ் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஏறக்குறைய தினமும் தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானின் உயரிய தலைவரைக் கொன்று தாக்குதல் நடத்தியதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மோதலைத் தொடங்கியபோது, ​​இந்தப் போர் ஆறு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டிருந்த போதிலும், இராணுவ ரீதியாக ஈரான் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று மீண்டும் மீண்டும் கூறி, ஹோர்முஸ் மீதான தனது வெற்றியையும் கட்டுப்பாட்டையும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

மேலும் ஹார்முஸ் நீரிணை தற்போது திறந்திருப்பதாகவும், அதன் வழியாக தினமும் பல மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்த போதிலும், சமீபத்திய வாரங்களில் கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக செவ்வாயன்று அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு, பதிலடி கொடுக்க வேண்டாம் என்று டெஹ்ரானை டிரம்ப் கடுமையாக எச்சரித்தார். அவ்வாறு பதிலடி கொடுத்தால், ஈரான் "மிகவும் கடுமையான மற்றும் உயர் மட்டத்தில் மீண்டும் தாக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

Donald Trump
Donald Trump

ஆனால் சில மணி நேரங்களுக்குள், ஈரான் இராணுவம் பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியது.இந்த மோதலால் கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு கேலன் (3.8 லிட்டர்) பெட்ரோலின் விலை 3 டாலருக்கும் குறைவாக இருந்த நிலையில், புதன்கிழமையன்று அது 4.12 டாலராக உயர்ந்ததாக 'அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன்' (AAA) தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த மாதம், ஹோர்முஸ் ஜலசந்தியை "அமெரிக்கப் பிரதேசம்" என்று கருதுவதாக டிரம்ப் கூறினார். கடந்த வாரம், கனடாவுடனான அமெரிக்காவின் வர்த்தகக் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒன்ராறியோ ஏரிக்கு அவர் தன்னிச்சையாக "அமெரிக்கா ஏரி" என்று பெயர் மாற்றியதும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது இந்த அறிவிப்பும் கவனம் பெறுகிறது.

இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹார்முஸ் நீரிணை (Hormuz Strait) என்ற பெயரை 'டிரம்ப் நீரிணை' (Trump Strait) என்று மாற்றலாமா? என்று அதிபர் டிரம்ப் முன்வைத்த யோசனை, ஒரு தவறான நடவடிக்கை என்றும் அது ஒரு ஆக்ரமிப்பு சக்தியாக மாறிவருகிறது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். நாடுகளுக்கு இடையே நடைபெறும் ஒரு இக்கட்டான மோதலின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட சமீபத்திய முயற்சியாகவே இந்த பெயர் மாற்ற அறிவிப்பு கருதப்படுகிறது.

அதே சமயம் அந்த நீர்வழிப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், அது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஈரான் தன் உரிமையை விட்டுத்தராமல் தொடர்ந்து கூறி வருவதும் இந்த விவகாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐகோர்ட்டில் தமிழுக்கே முதலிடம்: தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் விஜய்!
Donald trump
logo
Kalki Online
kalkionline.com