

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் இறந்த நிலையில் காணப்பட்டன.
இறந்த காகங்களை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ‘H5N1’ என்ற பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் தமிழ்நாடு முழுக்க பறவை காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோழி இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிடு வேண்டும் எனவும், ஆஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில், “ஏதேனும் பறவைகள் இறந்த நிலையில் காணப்பட்டால், பொதுமக்கள் உடனே அப்பறவைகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து விட வேண்டும். மேலும் இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது. திடீரென இறந்து போகும் கோழி இறைச்சிகளை பொதுமக்கள் யாரும் சாப்பிட வேண்டாம்.
ஒருவேளை திடீரென கோழிகள் இறந்து போனால், அது குறித்த தகவலை பொது சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் கோழி இறைச்சிகளை நன்றாக வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். தற்போதைக்கு ஆஃப் பாயில் சாப்பிடுவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை பொது மக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்” என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் தொற்றின் இறப்பு விகிதம் 50% ஆக உள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை காய்ச்சல் பரவினால், அது தொற்றுநோயாக மாற அதிக வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்:
சுவாசிப்பதில் சிரமம், கண்கள் சிவத்தல், காய்ச்சல், இருமல், உடல் வலி, தொண்டை வலி, தலைவலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை பறவை காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 'வைரஸால் பாதிக்கப்படும் பறவையின் மலம் அல்லது உமிழ்நீர் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு, பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.
பறவை காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரை, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.