#BIG NEWS : நீட் எதிர்ப்பு பைக் பேரணி - திராவிடர் கழகத்திற்கு அனுமதி!

நீட் தேர்வுக்கு எதிராக திராவிட கழகத்தின் பைக் பேரணி!: ஆகஸ்ட் 20-ல் அனுமதி தர நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!
chennai high court
Chennai High court image credit: Live law
Updated on

நீட் தேர்வுக்கு எதிராக திராவிட கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி அனுமதி வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தெரிவித்துள்ளது . பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி செய்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அனுமதி அளிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் நடத்தத் திராவிடர் கழகம் திட்டமிட்டு, இதற்கு தமிழகக் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து திராவிடக் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களைக் காட்டி அனுமதி கொடுக்க மறுத்தால், மக்கள் என்ன ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்? மாநில அரசு குடிமக்களின் அடிப்படை உரிமையை நசுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் கேள்வியை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்றவர் அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி சட்டம் ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டது என்றும், தமிழக அரசு நீட் போராட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறியவர், புதிய மனுவை அளித்தால் பரிசீலிக்கத் தயார் என்றும் தெரிவித்தார். இருப்பினும் பேரணியில் பொருளாதரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ஒரு கட்சி கையாள்வது குறித்து அவர் கவலைகளை எழுப்பிய பொழுது, போராட்டத்தின் உள்ளடக்கம் குறித்து காவல்துறை கவலைப்படக்கூடாது என்றும், அது சட்டப்பிரிவு 19 (2)ன் கீழ் வராத வரையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வாய்மொழியாக குறிப்பிட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மோட்டார் வாகன விதிகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் பேரணி செல்லும் என்றும், வருகிற 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியவர் தாங்கள் பைக் ரேஸ் நடத்தப் போவதில்லை என்றும் வாதாடினார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பேரணியில் பங்கேற்கப் போகும் இருசக்கர வாகனங்களுடைய எண்ணிக்கை, பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, பேரணி தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடங்கள் போன்ற விவரங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த மனுவை ஒத்தி வைத்தார். அத்துடன் அந்த விவரங்களைப் பதிவு செய்து பேரணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை, ஆகஸ்ட் 20ஆம் தேதி திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி Social Media-ல் வதந்தி பரப்பினால் 2 மணி நேரத்தில் ஆக்ஷன்! மத்திய அரசின் புது ரூல்ஸ்..!
chennai high court
logo
Kalki Online
kalkionline.com