

தகவல் தொழில்நுட்பம் உலக அளவில் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவும் அதற்கேற்ப பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப உலகில் புதிதாக களத்தில் இறங்கி இருக்கும் செயற்கை நுண்ணறிவு என்னும் ஏஐ தொழில்நுட்பம், அனைவரையும் கவர்ந்து விட்டது. அவ்வகையில் தற்போது டிரைவர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகமாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் இதுவொரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் நிலையில், 6 ஆண்டு கால சோதனைகளுக்குப் பிறகு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாக பெங்களூர் கருதப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் எளிதாக பணம் எடுப்பது போல, சமீபத்தில் இங்கு ஏடிஎம் இட்லி கடை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தோசை சுடும் ரோபோ, உணவு பரிமாறும் ரோபோ மற்றும் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ என இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு பெங்களூர் நகரம் மாறி வருகிறது. இந்நிலையில் தற்போது ஓட்டுநரே தேவைப்படாத கார் பெங்களூர் நகரத்தில் அறிமுகமாகியுள்ளது.
பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து டிரைவர் இல்லாத காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டிரைவர் இல்லாத கார், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு கட்ட சோதனைகளை நிறைவு செய்த பின்னரே, தற்போது இந்த கார் அறிமுகத்திற்கு வந்துள்ளது. நெரிசல் மிகுந்த சாலைகளில் எப்படி இயங்குவது, குறுகலான சாலைகளில் எப்படி இயங்குவது, காரின் குறுக்கே நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவை வந்தால் எப்படி இயங்க வேண்டும், போக்குவரத்து சிக்னல்களில் எப்படி இயங்குவது மற்றும் வாகனங்களுக்கு வழி விடுவது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை இந்த கார் நிறைவு செய்துள்ளது.
எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்குவதற்கு செயற்கைத் தொழில்நுட்பமும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது இந்த கார்.
ஆறு ஆண்டு கால உழைப்புக்கு பலனாக தயாரிக்கப்பட்டிருக்கும் டிரைவர் இல்லாத காரின் அறிமுக நிகழ்ச்சி, பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. டிரைவர் இல்லாத காரை உத்தராதி மடத்தின் சத்யாத்ம தீர்த்த சுவாமி அறிமுகப்படுத்தினார். பின்னர் கல்லூரியின் முதல்வர் உள்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் காரில் ஏறி, கல்லூரி வளாகத்திலேயே பயணம் செய்தனர்.
இந்தியாவிலேயே டிரைவர் இல்லாமல் ஓடும் முதல் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காரின் பிரம்மாண்ட தோற்றமும், அதிநவீன தொழில்நுட்பமும் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவிற்கு இருக்கிறது.