
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் மாலையணிந்து, விரதம் மேறகொண்டு மலைக்குச் செல்வது வழக்கம். சபரிமலைக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
நடப்பாண்டு சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கார்த்திகை முதல் தேதி தொடங்கி மார்கழி கடைசி தேதியில் வரும் மகரஜோதி வரை சபரிமலை சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் ஐப்பசி மாதம் முதலே பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கி விடுவார்கள்.
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்தால், அவர்களுக்கு ரூ.3 லட்சம் காப்பீடு வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் சபரிமலைக்கு மாலையணிந்து வருகிறார்கள். சபரிமலைக்கு வரும் வழியில் பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால், ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்க கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவசம்போர்டு தீர்மானித்தது. இதன்படி ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விபத்தில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் எங்கு இறந்தாலும் காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கேரள மாநிலம் முழுக்க ஐயப்ப பக்தர்கள் எங்கு விபத்தில் இறந்தாலும், ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது. இந்தத் திட்டம் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மலையேறும் போது மாரடைப்பால் சிலர் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இயற்கையாக மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 50-ஐ கடக்கிறது. கடந்த வருடத்தில் கூட மகர விளக்கு சீசனின் போது 48 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனால் இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு தேவசம்போர்டின் காப்பீடு கிடைக்காது.
இந்நிலையில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இயற்கையாக மரணம் அடைந்தாலும் காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய கூட்டத்தில் காப்பீடு தொடர்பான ஆலோசனையை பலரும் முன்வைத்தனர். முடிவில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இயற்கையாக மரணமடைந்தாலோ அல்லது மாரடைப்பால் இறந்தாலோ ரூ.3 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களின் இயற்கை மரணத்திற்கு காப்பீடு வழங்க, திருவிதாங்கூர் தேவசம்போர்டு காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு முதல் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இயற்கையாக மரணம் அடைந்தாலோ அல்லது மாரடைப்பால் இறந்தாலோ அவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
இந்த காப்பீட்டிற்கு நிதி சேகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை ஆன்லைன் முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணத்தை வசூலிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இருப்பினும் இந்தக் கட்டணத்தை பக்தர்கள் விரும்பினால் மட்டுமே செலுத்த வேண்டும் என்பதையும் தேவசம்போர்டு தெளிவுபடுத்தி உள்ளது.