

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். 18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். சுமார் 20 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் செல்லத்தக்கது. அதற்குப் பிறகு ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் உங்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆவண பயன்பாடு மற்றும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிக்கடி வருவதை குறைக்கும் வகையில் இதனை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு 50 வயது ஆன பிறகு ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் புதிய நடைமுறையால் எண்ணற்ற வாகன ஓட்டிகள் பயன் பெறுவர்.
உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் வரவிருப்பதால், அவருக்கு 50 வயதாகும் வரை அந்த ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியும். இதனால் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்த ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம். இந்த விதி தொடர்ந்து செயலில் இருக்கும்.
மேலும் இந்தத் திட்டத்தினால் அதிகாரிகளுக்கு வேலைப்பளுவும் குறையும். இது மட்டுமின்றி வாகன உரிமையாளரை மாற்றுதல், அனுமதி பத்திரங்களைப் புதுப்பித்தல், எல்எல்ஆர் மற்றும் பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முற்றிலும் ஆன்லைன் மயமாக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் சாலை விதிகளை மீறுவோர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதிக முறை சாலை விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் அதிகளவிலான சாலை விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் பயிற்சி மற்றும் தேர்வு எழுதிய பிறகு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே இந்த நடைமுறை செயல் வடிவம் பெறும்.
சாலை விபத்துகளை குறைக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் எளிமையான நடைமுறையை கொண்டு வரவுள்ளது.
ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிடட தொழில்நுட் உதவியுடன் சாலை விதிமீறல்களை துல்லியமாக பதிவு செய்யும் வசதிகள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தவே இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.