

மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (AAP) அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற CJP போராட்டக்காரர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து, அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை மிகக் கடுமையாகச் சாடினார். எந்தவித எதிர்ப்பையும் காட்டாத நிலையிலும் மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மக்களின் கவலைகளைக் கவனிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு அவர்களை அச்சுறுத்துவதாக அவர் கூறினார்.
‘மோடி அரசு நம் நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்திய இந்த தாக்குதல்... சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது கூட பிரிட்டிஷ் அரசு இவ்வளவு தீவிரமாகத் தடியடி நடத்தியிருக்காது. தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாக்குதலை நிறுத்துமாறு மாணவர்கள் காவல்துறையினரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர்’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
கெஜ்ரிவால், ‘Mr.மோடி, இந்த ஜனநாயக நாடு உங்கள் தந்தைக்குச் சொந்தமானது அல்ல. மக்களுக்கே சொந்தமானது. அச்சுறுத்தல்களை விடுப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில், ஒரு சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை வரலாறு நினைவில் கொள்ளும் வகையில் நாட்டு மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள்’ என்று மிக ஆவேசமாகக் கூறினார்.
மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற CJP அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுத்ததைத் தொடர்ந்து மோதல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் அதிகப்படியான பலப்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
தேர்வுத் தாள்கள் கசிந்ததாகக் கூறப்படுவது, மதிப்பீடு மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் முறைகேடுகள், மற்றும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் சீர்திருத்தங்களைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க காவல்துறை பலத்தைப் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மற்றும் பொதுச்சொத்து சேதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளது; அதேவேளையில், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது காவல்துறை கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொண்டதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டத்தின் போது காயமடைந்தவர்களைச் சந்திக்க ராம் மனோகர் லோஹியா (RML) மருத்துவமனைக்குச் சென்ற கெஜ்ரிவால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சட்ட மற்றும் மருத்துவ உதவிக்கான உதவி எண்ணையும் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க நினைக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.