

சென்னையில் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் தான் கட்டிடக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி சென்னையில் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால், வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் சாலையோரங்கள், நடைபாதைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் காலி இடங்களில் கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகள் கொட்டப்பட்டு வருவது கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது. கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதன் காரணமாக, சென்னையில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகிறது.
அதோடு காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இதுதவிர மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதால் வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சம்பவங்கள் அங்கீகாரமின்றி நடப்பதால், இது குறித்து தகுந்த நடவடிக்கையை எடுக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பில் புகார்கள் எழுந்தன.
சென்னையில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டும் நபர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.
இதில், “சென்னையில் உள்ள பொது இடங்களில் அங்கீகாரம் இன்றி கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டும் வாகனங்களைக் கண்டறிந்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் தேவையான விவரங்கள் அனைத்தையும், அதிகாரிகள் தங்கள் செல்போனில் உள்ள செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளின் அளவைப் பொறுத்து, ஒரு டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராதத் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் அதிகாரிகளால் விடுவிக்கப்படும். சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், வாடகை ஒப்பந்ததாரர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கட்டிடக் கழிவுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இந்த நிலையான நடைமுறை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் இந்த புதிய உத்தரவை மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை” என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையைப் பாதுகாப்பாக வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுவெளியில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால், அபராதம் விதிககப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது