இந்த ஆண்டின் மிகப்பெரிய புழுதிப் புயல் ஈராக்கின் தெற்கு மாகாணங்களில் வீசியது. இந்த புழுதிப் புயல் மற்ற அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. அரபு நாடுகளில் ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயல் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. குறிப்பாக குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் கடுமையான புழுதிப் புயல்கள் வீசி வருகின்றன. தூசிகள் எதிரே இருப்பவற்றை மறைப்பதால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்படுகின்றனர்.
இந்த புழுதிப் புயலால் சுமார் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் அரசாங்கங்கள் அவசரகால நிலையை அறிவித்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தூசிப் புயல் பற்றி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏப்ரல் 14 அன்று ஈராக்கைத் தாக்கிய புழுதிப் புயலில், தெற்கு மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 2,700க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய மற்றும் தெற்கு ஈராக்கில் திங்கட்கிழமை ஒரு சக்திவாய்ந்த மணல் புயல் வீசியது. இதனால் 1,800க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்தன்னா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 700 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நஜாஃப் மாநிலத்தில், சுவாசப் கோளாறுகளுக்காக 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. திவானியா மாநிலத்தில் 322 நோயாளிகள் சுவாசக் கோளாறுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி கார் மற்றும் பாஸ்ரா மாநிலங்களில் 530க்கும் மேற்பட்ட மூச்சுத் திணறல் நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். புழுதிப் புயல்களில் காற்றில் தூசி கடுமையாக பரவுவதால் , அவை மூச்சுக் குழாயின் வழியாக நுரையீரல் வரை பரவி தற்காலிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக மூச்சுத் திணறல் , சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் வெளியில் பயணம் செய்பவர்களுக்கு , தூசிகள் மூடுபனியை போல எதிரே உள்ளதை முற்றிலும் மறைப்பதால் ஏராளமான சாலை விபத்துகளும் நடைபெறுகின்றன.
பார்வை வரம்பின் தெரிவுநிலை ஒரு கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்ததால் நஜாஃப் மற்றும் பாஸ்ரா மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. தூசிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முகமூடிகள் அல்லது முகக்கவசம் அணிவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
ஈராக்கில் மற்றும் பாலைவன நாடுகளில் புழுதிப் புயல்கள் என்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். இவை அடிக்கடி உருவாகும், சில நேரங்களில் கணிக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். ஈராக்கிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த ஆண்டில் அடிக்கடி புழுதிப் புயல் வீசும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீர் பற்றாக்குறை ஆகிய காரணத்தினால் மணல் புயல்கள் அடிக்கடி ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்ற பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய ஐந்து நாடுகளில் ஒன்றாக ஈராக்கை ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிட்டுள்ளது.
புழுதிப் புயல் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. குவைத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது; மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தெரிவுநிலை பூஜ்ஜியத்தை எட்டியதால் சாலைகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
2022ல் இதே போன்ற பெரிய புழுதிப் புயலில் ஒருவர் பலியானார். மேலும் 5,000 க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.