E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகன காப்பீட்டின் செல்லுபடியாகும் தன்மை பாதிக்கப்படாது என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தெளிவுபடுத்தலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியுள்ளது .
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் போர் தீவிரமடைந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் 3 மாதங்களுக்கும் மேலாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் பெருமளவு இறக்குமதியையே நம்பி உள்ளது. இதற்கிடையே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கச்சா எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பெட்ரோலுடன், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை 20 சதவீதம் கலந்து E20 பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம்தேதி முதல் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதே சமயம், எத்தனாலை கலப்பது, அந்நியச் செலாவணியை சேமிப்பதுடன், மாசுபாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த முடிவு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் மாசுபாட்டை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. சுருக்கமாக சொல்வதென்றால் வெளிநாட்டு செலவை குறைப்பதற்காகவும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், காற்று மாசை குறைப்பதற்காகவும், இந்த E20 பெட்ரோல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதன் மூலம், இந்தியா ₹1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமிக்க இத்திட்டம் உதவியுள்ளதாக அது கூறியது.
மேலும் E20 பெட்ரோல் என்பது 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கலந்த ஒரு சூழல் நட்பு எரிபொருளாகும். 20% எத்தனால் கரும்பு அல்லது மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனால் அதிக ஆக்டேன் (Octane) கொண்டிருப்பதால், வாகனங்களின் என்ஜின் செயல்திறன் மற்றும் முடுக்கம் (Acceleration) சிறப்பாக இருக்கும். மேலும் இந்த கலவை, பெட்ரோலின் தரத்தை சுமார் 95 சதவீதம் வரை அதிகரித்து, அதன் விளைவாக வாகனத்தின் என்ஜின் சீராக இயங்குவதோடு, நாக் சத்தமும் குறைகிறது.
மேலும், ஏப்ரல் 2023-க்குப் பிறகு தயாரிக்கப்படும் BS6 இரண்டாம் கட்ட வாகனங்கள் E20 பெட்ரோல் எரிபொருளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த புதிய பெட்ரோலை பயன்படுத்தும்போது, இந்த வாகனங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. அதாவது அதாவது 2023-க்கு பின் வாங்கிய வாகனங்களுக்கு E20 மிகவும் பாதுகாப்பானது. பழைய வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முன், வாகன உற்பத்தியாளரின் கையேட்டை (Owner's manual) சரிபார்ப்பது நல்லது.
இந்நிலையில், E20 பெட்ரோல் (20% எத்தனால் கலப்பு) வாகன எஞ்சின்களைப் பாதிப்பதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு காப்பீடு (வாகன இன்சூரன்ஸ்) மறுக்கப்படுதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், இது முற்றிலும் தவறான தகவல் என மறுத்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் பொருளாதார ரீதியாக பலன் அளிக்கக் கூடியது என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் எத்தனால் (E20) பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களில் பரவலான எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை என்றும் அறிவியல் பூர்வமாக இது பாதுகாப்பானது என்றும், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் தொட்டிக்குள் தண்ணீர் புகுவதுதான் வாகனத்திற்கு ஆபத்தானதே தவிர, எத்தனால் கலப்பு அல்ல என்று கூறியுள்ளது.
E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்சூரன்ஸ் செல்லாது என்பது ஆதாரமற்றவை, பொய்யான தகவல் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இணையத்தில் பரவும் பூச்சிகள் மொய்ப்பது அல்லது பெட்ரோலில் கரும்புச் சாற்றை நேரடியாக கலப்பது போன்ற வீடியோக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.
எத்தனால் கலத்தல் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை எனவும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.