'இ-20 பெட்ரோலால்' மைலேஜ் குறைஞ்சிடுச்சு.. சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பழைய வாகனம் வைத்திருக்கும் பலர் தற்போது விற்பனையாகும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் தங்களுடைய வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர்.
E20
E20
Published on

கடந்த மூன்று வாரங்களாக இ20 பெட்ரோலின் அறிமுகம் குறித்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன் அது, நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.

இந்தியாவில் பல லட்சம் மக்கள் இன்னும் பழைய வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பழைய வாகனம் வைத்திருக்கும் பலர் தற்போது விற்பனையாகும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் தங்களுடைய வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது ஆய்வு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பல இலட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் உலகில் எல்லா நாடுகளிலும் கிடைக்காததாலும், குறிப்பிட்ட சில நாடுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளதாலும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை முடிந்தவரையில் குறைக்க கடந்த பல வருடங்களாகவே இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
கச்சா எண்ணெய் வர்த்தகம் : மக்களுக்கு சுமை, தனியார் நிறுவனங்களுக்கு லாபம்!
E20

கச்சா எண்ணெயின் பயன்பாட்டை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்று நினைத்த மத்திய அரசுக்கு எத்தனால் (Ethonal) கண்ணில் பட்டது. பெட்ரோலுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்துவது நீண்ட வருடங்களாக நடந்துவரும் செயல்முறை தான் என்றாலும், ஆரம்பத்தில் 100% எரிபொருளில் 95% பெட்ரோலும், 5% மட்டுமே எத்தனாலும் கலந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் 5% எத்தனாலை 20% ஆக அதிகரித்தது மத்திய அரசு. அதாவது, 80% பெட்ரோலும், 20% எத்தனாலும் கலந்துதான் தற்போது இ20 பெட்ரோல் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

20% எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை பயன்படுத்துவதினால் வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாக பிரச்சனை எழுந்த போதே மத்திய அரசும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இ20 பெட்ரோல் குறித்து பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்ட பிறகே விற்பனைக்கு கொண்டு வந்ததாக அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சமூக தளமான LocalCircles நடத்திய ஆய்வில், 28% பேர் தங்களது வாகனங்களில் இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது 3-ல் 2பேர் இ20 பெட்ரோலால் தங்களது வாகனத்தின் மைலேஜ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக இன்ஜின், ஃப்யூயல் லைன், டேங்க், மற்றும் கார்பரேட்டர் ஆகிய பகுதிகளில் பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். இந்தியாவின் 331 மாவட்டங்களில் இருந்து 37,000க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 52 சதவீத மக்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இ20 பெட்ரோலுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் 20 சதவீத மக்கள் பெட்ரோல் மற்றும் இ20 என தங்களுக்கு தேவையான பெட்ரோலை தேர்வு செய்யும் ஆப்ஷன் பெட்ரோல் பங்க்குகளில் வழங்கப்பட வேண்டும் என தங்களது விருப்பதை கூறியுள்ளனர்.

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும், கலக்கப்படாத பெட்ரோலுக்கும் வெவ்வேறு விதமான கம்பஷன் அம்சங்கள் உள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்டுத்த தகுந்த அம்சங்களான பெட்ரோல் டேங்க், ஃப்யூயல் லைன்கள், இன்ஜின்கள் போன்றவை உள்ள இ20 வாகனங்களை தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

இ20 பெட்ரோலுக்கு ஏற்றபடி பழைய வாகனங்களின் என்ஜின் மற்றும் அதனை சார்ந்த பாகங்கள் அப்கிரேட் செய்யப்பட்டாலும், பெட்ரோல் வாகனங்களில் என்ஜின் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மைலேஜ் (Mileage) குறைவதாகவும் பலர் புகார்கள் தெரிவித்து வரும் நிலையில், ஏற்கனவே மக்களிடம் பயன்பாட்டில் இருக்கும் பழைய பெட்ரோல் வாகனங்களின் கதி என்ன? என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவுக்கு குறைந்த விலையில் தர ரஷ்யா உறுதி!
E20

இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் உந்துதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இ20-க்கு இணங்காத பழைய வாகனங்கள் கேஸ்கட்கள், பெட்ரோல் டேங்க் மற்றும் ரப்பர் குழாய்களில் படிப்படியான அரிப்பை எதிர்கொள்ளக்கூடும் என்றும், எத்தனாலின் குறைந்த கலோரிஃபிக் மதிப்பு காரணமாக மைலேஜில் 2–5 சதவீதம் வரை குறையக்கூடும் என்ற வாகன பொறியாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி PTI அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், கொல்கத்தாவில் விற்கப்படும் XP95 மற்றும் நிலையான பெட்ரோல் இரண்டிலும் ஏற்கனவே 20 சதவீத எத்தனால் உள்ளது, அதாவது பிரீமியம் எரிபொருள் கலப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இ20 பெட்ரோலால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகளைப் பாராட்டிய TVS மோட்டார்ஸ், பழைய வாகனங்கள் எரிபொருளில் பாதுகாப்பாக இயக்க மறுசீரமைப்பு தேவைப்படலாம் என்று கூறியுள்ளது. TVS மோட்டார்ஸ் மற்றும் பிற தொழில்துறை ஆதாரங்களின்படி, பழைய வாகனங்களில் பெட்ரோல் டேங்க், ஃப்யூயல் லைன்கள், இன்ஜின் கட்டுப்பாட்டு அலகின் மறுசீரமைப்பு, எத்தனாலின் அரிக்கும் விளைவுகளை இயந்திரங்கள் தாங்கும் என்பதை உறுதிசெய்ய நீண்டகால ஆயுள் சோதனை, மட்டுமின்றி இ20-ல் வாகனங்களை இயக்குவதற்கு தொழில்நுட்ப மாற்றங்கள் தேவை என்பதை வாகன உற்பத்தியாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய நிதின்கட்கரி, ‘20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டில் ஏதேனும் கார்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய ஆட்டோமொடிவ் ஆராய்ச்சி சங்கம் ஆகிய இரண்டும் இ20 பொட்ரோலை ஆதரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
'இ-20 பெட்ரோலால்' மைலேஜ் குறையுமா? உண்மையை உடைத்த மத்திய அரசு!
E20

டாடா மோட்டார்ஸ் உட்பட சில நிறுவனங்கள் தங்கள் வாகனங்கள் ஏற்கனவே இ20-க்கு இணக்கமானவை என்று அறிவித்துள்ள நிலையில், மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் போன்ற பிற நிறுவனங்கள் இந்த பிரச்சினையில் அமைதியாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com