
வெளிநாடுகளில் இருந்து பல இலட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலைக் காக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு அடுத்தபடியாக எத்தனால் கலந்த பெட்ரோலை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
தொடக்கத்தில் 90% பெட்ரோலில் 10% எத்தனால் மட்டுமே கலக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 20% எத்தனாலைக் கலக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதால் வாகனங்கள் விரைவில் பழுதடைந்து விடுவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் செயல்பாடு நன்றாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “20% எத்தனால் கலந்த பெட்ரோலைப் (இ-20 பெட்ரோல்) பயன்படுத்தும் போது நவீன என்ஜின்கள் அதிக செயல்திறனைப் பெறுகின்றன. இ-20 பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் பருவ நிலைக் குறிக்கோள்களை எளிதாக அடைய முடியும். அதோடு வருகின்ற 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு நிலையை இந்தியா அடைய இ-20 பெட்ரோல் மிகப்பெரிய மாற்று சக்தியாக இருக்கும்.
எத்தனால் தயாரிக்க கரும்பு மற்றும் மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி வருமானம் கிடைக்கும். கரும்பு மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனாலில் பசுமை இல்ல வாயு உமிழ்வு, பெட்ரோலை விட முறையே 65% மற்றும் 50% குறைவாக உள்ளது. இதன்படி 80% பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலப்பதால் வாகனங்களின் செயல்திறன் நன்றாகவே இருக்கும்.
வாகனப் பராமரிப்பு, வேகமாக ஓட்டுதல், டயர்களின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் மைலேஜ் குறைவதற்கும், வாகனங்கள் பழுதடைவதற்கும் காரணம். எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் திறன் மேம்பாடு அடைந்திருப்பது தான் உண்மை. மேலும் வாகனம் ஸ்டார்ட் ஆகும் திறன், ஓட்டும் திறன் மற்றும் உலோகம் இணக்கத்தன்மை ஆகியவற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பழைய வாகனங்களில் மட்டுமே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு வாகனத்தை சரியாகப் பராமரிக்காமல் இருப்பதே முக்கிய காரணம்” என விளக்கமளித்துள்ளது மத்திய அரசு.
பிரேசில் நாட்டில் 27% எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டு வருகிறது. அங்கு வாகன உற்பத்தி மற்றும் விற்பனை சீராகவே உள்ளது. மேலும் வாகனங்களில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்தியாவில் அதை விடக் குறைவாக 20% மட்டுமே கலக்கப்படுகிறது.
இ-20 பெட்ரோல் பயன்பாட்டால் இதுவரை 245 இலட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை மத்திய அரசு சேமித்துள்ளது. மேலும் 736 இலட்சம் மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. இது 30 கோடி மரங்களை நட்டுப் பராமரிப்பதற்கு சமமாகும்.