கள்ள ஓட்டுக்கு எண்ட் கார்டு: இடைத்தேர்தலில் 'முக சரிபார்ப்பு' தொழில்நுட்பம் அறிமுகம்..!

மகாராஷ்ராவில் நடக்கும் தேர்தலில் முதல் முறையாக முக சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.
maharashtra election Facial Recognition
Facial RecognitionAI Image
Updated on

மகாராஷ்டிராவில் கள்ள ஓட்டு மற்றும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில், நாசிக் மாவட்டத்தில் (Nashik) இன்று நடைபெறும் சட்ட மேலவை இடைத்தேர்தலில் 'முக சரிபார்ப்பு' (Facial Recognition) தொழில்நுட்பத்தை சோதனை முறையில் (Pilot basis) முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிமுகம் செய்கிறது. தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், போலி வாக்காளர்களைக் கண்டறியவும் இது பெரிதும் உதவுகிறது. மேலும் இத்தொகுதியில் மொத்தம் 619 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால், இது ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி, பூத் ஏஜெண்டுகள் சரிபார்த்த பின்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய தொழில்நுட்ப முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி வாக்குசாவடிக்கு வரும் வாக்காளரின் முகம், அங்கிருக்கும் பிரத்யேக கேமரா அல்லது செல்போன் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.

அந்த படம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் தரவுத்தளத்தில் உள்ள புகைப்படத்துடன் நொடிப்பொழுதில் ஒப்பிடப்பட்டு, அவர்தான் அசல் வாக்காளரா என்பது கணினி மூலம் டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப்படும். இதுதான் முகசரிபார்ப்பு முறை தொழில்நுட்பம். முறைகேடுகளைத் தவிர்த்து, உண்மையான வாக்காளர்களை மட்டுமே உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் வாக்காளரின் அடையாளம் அசல் தானா என்பது துல்லியமாக உறுதி செய்யப்பட்டு, ஒரு நபர் மற்றொருவரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போடுவது அல்லது ஒரே நபர் வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று போலி ஆவணங்கள் மூலம் பலமுறை வாக்களிப்பது முற்றிலும் தடுக்கப்படுவதுடன் முறைகேடற்ற தேர்தல் நடத்த வழிவகுக்கும். அதேசமயம் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் வாக்காளர்கள் வழக்கமான முறையிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மகாராஷ்டிராவில் இன்று நடைபெற உள்ள தேர்தலில் இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது.

Election commission
Election commission

அதாவது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தொகுதிக்கான சட்டமன்ற மேலவை தேர்தலில் தான் இந்த ‘முக சரிபார்ப்பு’ முறை முதன்முறையாக பரிசோதிக்கப்படுகிறது. இங்கு ‘உள்ளாட்சி அமைப்புகள் தொகுதி’ என்பது அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்கும் ஒரு சிறப்பு தொகுதியாகும்.

இத்தொகுதியில் மொத்தம் 619 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதால், இது ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முதன்முறையாக இங்கு சோதனை முயற்சியாக தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக செயல்படுத்தி பார்க்கிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டாலும் வாக்காளர்கள் வழக்கம்போல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மறுவாக்குப்பதிவு நடத்தவும் தயார்: தேர்தல் ஆணையம் அதிரடி!
maharashtra election Facial Recognition

இதில் கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் பிற மாநில தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாடு முழுவதும் இந்த முறையை விரிவுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வாக்காளர்களின் ஆவணங்களை மனிதர்கள் சரிபார்ப்பதை விட, இந்த தொழில்நுட்பம் மிக குறைந்த நொடிகளில் சரிபார்த்து விடுவதால் வாக்குப்பதிவு வேகமாக நடைபெறும் என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் நீங்கி நூறு சதவீதம் தூய்மையான முறையில் தேர்தல் நடைபெற வழிவகை ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையம் நம்புகிறது.

இந்தியாவில் ஏற்கனவே கடந்த 2020-ல் தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல்களின் போது மிக குறைந்த அளவிலான வாக்குச்சாவடிகளில் இத்தகைய தொழில்நுட்பம் முதன்முறையாகப் பரிசோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் மகாராஷ்டிராவில் தான் அதிநவீன வசதிகளுடன் மிகப்பெரிய அளவில் இது தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாக்களிப்பதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் சிறை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!
maharashtra election Facial Recognition

இது இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்ட டிஜிட்டல் யுகத்திற்கு எடுத்து செல்லும் ஒரு வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com