

இந்தியாவில் அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு குழந்தைகள் இடையே அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் இத்தகைய பொருட்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக மாறி வரும் நிலையில், காலை முதல் இரவு வரை அவற்றின் விளம்பரங்களைத் தடை செய்ய பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், குழந்தைகளின் உடல் பருமனைக் குறைக்கும் அதே வேளையில், பச்சிளம் குழந்தைகளுக்கான பால், பானங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், 2015-16-ம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2.1 சதவீதத்திலிருந்து 2019-21-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உடல் பருமன் வேகமான அதிகரித்து வருகிறது. மதிப்பீடுகளின்படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 3.3 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உடல் பருமனாக இருந்தனர், மேலும் இது 2035-ம் ஆண்டுக்குள் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக குழந்தைகள் இடையே அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை ஆகியவை கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அதிகரித்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) 2019-21-ம் ஆண்டில், இந்தியாவில் பெண்களில் 24 சதவீதத்தினரும், இந்திய ஆண்களில் 23 சதவீதத்தினரும் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளதாக கூறுகிறது. அதேசமயம், 15-49 வயதுடைய பெண்களில், 6.4 சதவீதம் பேர் உடல் பருமனாகவும், ஆண்களில் 4.0 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எனவே, இந்தியாவில் அத்தகைய உணவுப்பொருட்கள் குறித்த விளம்பரங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை தடை விதிக்கப்பட வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கான பால், பானங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று NFHS கூறியுள்ளது.
மேலும் ஊடகங்களைத் தவிர, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (UPF) சந்தைப்படுத்தல் கட்டுப்பாடுகளை கட்டாயமாக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் மீடியாவையும் உள்ளடக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
ஒருங்கிணைந்த சட்டங்களைக் கொண்ட சிலி, நார்வே மற்றும் UK நாடுகளில், UPFகளுக்கு விளம்பரக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
சமீபத்தில், குழந்தைகளின் உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் இரவு 9 மணிக்கு முன் குப்பை உணவு விளம்பரங்களை UK தடை செய்துள்ளது.
விளம்பரக் குறியீட்டின் விதி 7ன்படி, தவறாக வழிநடத்தும், சரிபார்க்கப்படாத அல்லது ஆரோக்கியமற்ற விளம்பரங்களைத் தடை செய்கிறது.
இதேபோல், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் (2022), விளம்பரங்கள் சுகாதார நன்மைகளை மிகைப்படுத்தவோ அல்லது குழந்தைகளை சுரண்டவோ கூடாது என்று கட்டளையிடுகிறது. ஆனால் தெளிவான ஊட்டச்சத்து வரம்புகள் அல்லது தவறான கூற்றுக்களை அடையாளம் காண்பதற்கான கட்டமைப்பு இல்லை என்று கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
உலகளவில் பர்கர்கள், நூடுல்ஸ், பீட்சா, குளிர்பானங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய, ஜங்க் ஃபுட்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் UPF-ஐ மக்கள் அதிகளவில் உட்கொள்வது நாள்பட்ட நோய்களுக்கு பங்களிப்பதாகவும், சுகாதார ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
UPFகள் சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்புக்கான வரம்புகளை மீறினால், அதிகபட்ச GST அடுக்கு மற்றும் கூடுதல் கட்டணம் விதிக்க கணக்கெடுப்பு முன்மொழிகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI), UPF-களை மாற்றுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தெளிவான வரையறை மற்றும் தரநிலைகளுடன் ஒழுங்குமுறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இலக்காகக் கொண்ட இலக்கு பிரச்சாரங்கள் மூலம் UPF-களை உட்கொள்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது அழைப்பு விடுக்கிறது.
இந்தியாவில் 2009 மற்றும் 2023க்கு இடையில் UPF-களின் விற்பனை 150 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்தது. இந்தியாவில் UPF-களின் சில்லறை விற்பனை 2006-ல் 0.9 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2019-ல் கிட்டத்தட்ட 38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 40 மடங்கு அதிகரிப்பு. இதனால் ‘ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் உடல் பருமன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இந்தியர்களின் உணவில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPFs) அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, 2026-27 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து ஊடகங்களுக்கும் அத்தகைய தயாரிப்புகளுக்கு சந்தைப்படுத்தல் தடை விதிக்க பரிந்துரைக்கிறது.