

நுண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது. வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள், பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட இந்த மருந்துகளை பாய்லர் கோழி, முட்டை கோழி உள்ளிட்ட இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடிய பறவைகளுக்கும்,விலங்கினங்களுக்கும் கொடுக்கப்படுவதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோழிகளுக்கு தீவணத்துடன் கலந்து கொடுக்கப்படும் நைட்ரோஃப்பூரான் வேதிப்பொருள் கலந்த உணவை தொடர்ந்து உட்கொண்டால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இருப்பினும் புரத சத்து நிறைந்த முட்டையை ஒதுக்கி வைக்கவோ,அச்சப்படவோ தேவையில்லை என்று கூறுகின்றனர்.
ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து,மத்திய உணவு பாதுகாப்பு துறையானது பிறப்பித்த உத்தரவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் முட்டை மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்ப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டைகளும், முட்டை பவுடர்களும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முட்டையில் எவ்விதமான நச்சு பொருளும் இல்லை என பல்வேறு துறைகளில் சான்று பெற்ற பின்னரே முட்டைகள், முட்டை பவுடர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் புற்றுநோயை உருவாக்கும் மருந்து பயன்படுத்துவது இல்லை என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் மண்டல தலைவர் (NECC) சிங்கராஜ் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் பல்வேறு பயோ செக்யூரிட்டி முறைகளை கையாண்டு கோழிகள் பராமரிக்கப்படுகிறது. புற்றுநோயை உருவாக்க கூடிய ஆண்டிபயாடிக் மருந்துகளை பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு பயன்படுத்துவது இல்லை. தற்போது சர்ச்சை எழுந்துள்ள நைட்ரோ பியூரான் மருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டது. ஒரு சில சமூக வலைதளங்களில் முட்டை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். வதந்திகளை நம்பாமல் எவ்வித பயமும் இல்லாமல் பொதுமக்கள் வழக்கம்போல் முட்டைகளை சாப்பிடலாம்.
பொதுமக்களின் ஐயத்தை போக்கும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் நடப்பு வாரத்தில் கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு, முட்டை மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் மேற்கொண்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 300 பண்ணைகளில் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை (TNFSDAD) அதிகாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 300 கோழிப் பண்ணைகளில் இருந்து மாதிரிகளை சோதனைக்காக சேகரிக்க உள்ளனர்.
TNFSDAD-க்கான நியமிக்கப்பட்ட அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் கூறும் போது, நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் எந்த ரசாயனமும் இல்லை என்றார். மேலும் ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 300 கோழிப் பண்ணைகளிலிருந்தும் மாதிரிகளை எடுத்த பிறகு, அவற்றை சோதனைக்கு அனுப்பி ஒரு வாரத்தில் முடிவுகளை அறிவிப்போம் என்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் இதேபோன்ற சோதனைகள் நடத்தப்படும்’ என்று அவர் கூறினார்.