

சமீப காலமாக ‘எல் நினோ’ (El Nino) இந்த வார்த்தையை அனைவரும் அதிகமாக கேட்டிருக்கலாம். மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பு வழக்கத்தை விட அதிக வெப்பம் அடையும் இயற்கையான கால நிகழ்வை ‘எல் நினோ’ என்கின்றனர். இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளை மாற்றியமைக்கிறது. அத்துடன், குறிப்பிடத்தக்க பகுதிகளில் கடும் வறட்சியையும், பிற பகுதிகளில் பெருமழையையும் பொழிகிறது.
எல் நினோ என்பது இயற்கையாக நடைபெறும் கடல்-வானியல் நிகழ்வாகும். இந்த நிகழ்வுகள் உலகளாவிய காலநிலை அமைப்புகளை பாதிக்கின்றன மற்றும் உலகம் முழுவதும் கடுமையான காலநிலை, வறட்சி, மற்றும் வெப்ப அலையை தூண்டக்கூடும். எல் நினோ பொதுவாக பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும். இந்தியப் பகுதியின் மீது, இதன் தாக்கம் மழையை குறைப்பதாக இருக்கும்.
குறிப்பாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூப்பர் எல்நினோ (Super El Nino), 2026-ல் உலகளாவிய காலநிலை மாற்றத்தையும், அதீத வெப்பத்தையும் ஏற்படுத்தி, தென்மேற்கு பருவமழையை வெகுவாகக் குறைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். NOAA-வின் கூற்றுப்படி அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் மிகவும் வலிமையான எல் நினோ உருவாக 81 சதவீத வாய்ப்பு உள்ளது.
தற்போது எல் நினோ (El Niño) தீவிரமடைந்து வருவதால், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய அடுத்த 3 மாதங்களும் தமிழகம் மற்றும் இந்தியாவில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவும் மற்றும் வறட்சியான சூழல் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது பகல் நேர வெப்பநிலை வழக்கமான அளவை விட 3°C முதல் 4°C வரை உயரக்கூடும்.
எல் நினோ தாக்கத்தால் வழக்கமாக செப்டம்பருடன் குறையும் வெயிலின் தாக்கம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீப காலமாக தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதற்கும், இதுதான் காரணம்.
இந்தாண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் செப்டம்பர் வரை நீடித்த கோடைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என இந்தாண்டு தொடக்கத்திலேயே தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 13-ம்தேதி வேலூரில் அதிகபட்சமாக 42.6 °C வெப்பம் பதிவானது. மதுரையில் ஜூலை 14-ம்தேதி 42.5°C வெப்பம் பதிவானது. கடந்த 26 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் மதுரையில் பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை இதுவாகும். இதனால் நகர் முழுவதும் வெப்ப அலை வாட்டியது. வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜூலை மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 33.6°C வெப்பம் பதிவாகியுள்ளது. இது 1914-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதி பதிவான 33.3°C வெப்ப நிலையை விட அதிகமாகும். ஆந்திராவிலும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூலை மாதத்தில் 42°C வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுமட்டுமின்றி குளிர் பிரதேசங்களான உதகை மற்றும் கொடைக்கானல், உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் இயல்பை விட அதிக வெப்பம், அதாவது 6 முதல் 7°C வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 39°Cக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
நீடித்த வெப்பத்தால் குளம், குட்டை, போன்ற நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைவதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், குறுவை சாகுபடியில் மகசூல் பாதிப்பு, நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைதல் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.
மழைப்பொழிவு குறையும் என்பதால், முக்கிய அணைகளில் போதிய நீர் திறக்கப்படாத நிலையில் நீர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாக பொழிந்துள்ளது. காவேரி போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்து மேட்டூர் அணை திறப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. ஜூன் - முதல் செப்டம்பர் மாதம் வரை பொழியும் மழையை நம்பித்தான் விவசாய பணிகள் நடக்கிறது.
எல் நினோவால் பருவமழை பொய்த்து போனால் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். பருவமழை குறைவு காரணமாக அரிசி, பருப்பு போன்ற பயிர்கள் விதைப்பில் தாமதம் ஏற்படும். தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் ஆற்றுப் பாசனத்தை நம்பி உள்ளது.
உற்பத்தி குறைவு ஏற்பட்டால் வினியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும். உணவு பொருட்களின் வினியோகம் குறைந்தால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை உயர்த்துகிறது. விவசாய விளைப்பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்.
எல் நினோ பாதிப்பால் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களில் 226 மாவட்டங்களில் மழை குறைந்து வறட்சி ஏற்படலாம் என மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் எல் நினோ தாக்கம் காரணமாக 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.