நடப்பாண்டில் நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது இந்திய தேர்தல் ஆணையம். இந்தத் திருத்தத்திற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், வாக்காளர் திருத்தப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டியது தேர்தல் ஆணையம். போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவதே சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதன்படி இன்று (நவம்பர் 04) தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையிலின ஒரு மாத காலத்திற்கு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டிலும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எந்தவித தவறும் நடக்காத வண்ணம் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் போது, பொதுமக்கள் சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
1. இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களுக்கு இரட்டைப் பிரதிகளில் அச்சிடப்பட்ட விவரங்களுடன் அடங்கிய கணக்கீட்டு படிவத்தினை விநியோகிப்பார்கள். இந்தப் படிவத்தை நிரப்புவதற்கும் அவர்களே உதவி செய்வார்கள்.
2. இந்தப் பணியின் போது வாக்காளர்களின் வீடு பூட்டப்பட்டிருந்தால், சாவடி நிலை அலுவலர்கள் படிவத்தை பாதுகாப்பாக கதவருகே வைத்து விட்டுச் செல்வர். வாக்காளர்கள் வீட்டிற்கு வந்த பிறகு இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
3. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப வாங்குவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூன்று முறை வருகை தருவார்கள். இதில் ஏதேனும் ஒரு முறை வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவத்தை ஒப்படைக்கலாம்.
4. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்வதோடு, அதனை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இதற்காக https://Voters.eci.gov.in மற்றும் https://electors.eci.gov.in ஆகிய 2 இணையதளங்களிலோ அல்லது ECINET என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் போது வாக்காளர்கள் எந்த ஒரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், முந்தைய சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உங்களது பெயர் இல்லை எனில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களில், சுய சான்றுப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
6. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பிப் பெறும் போது அதற்கான ஒப்புகை சீட்டை வழங்குவர்.
சுயச்சான்று அளித்து சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல்:
1. மத்திய/மாநில அரசுகளின் வழக்கமான அடையாள அட்டை.
2. அஞ்சல் துறை, எல்.ஐ.சி, வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை.
3. பென்சன் வாங்குவதற்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை.
4. பாஸ்போர்ட்
5. பிறப்புச் சான்றிதழ்
6. வசிப்பிடச் சான்றிதழ்
7. கல்விச் சான்றிதழ்கள் 8. வன உரிமைச் சான்றிதழ்
9. தேசிய குடிமக்கள் பதிவேடு
10. சாதி சான்றிதழ்
11. அரசால் வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு சான்றிதழ்
12. ஆதார் அட்டை.