

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக இசிஐநெட் (ECINet)என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவான செயலியானது, தேர்தல் தொடர்பான அத்தியாவசிய சேவைகளை ஒருங்கிணைத்து, வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளின் இருப்பிடங்கள் மற்றும் நிகழ்நேரத் தேர்தல் நிலவரங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ‘வோட்டர் டர்ன் அவுட்’ என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் ஒருமுறை வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சதவீதம் அளவில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் வாக்குப்பதிவு விவரங்களை இந்த செயலி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எளிதாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
ECINet செயலியின் சோதனைப் பதிப்பு, 2025-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களின் போது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய தளம், வாக்காளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கவும், வாக்குப்பதிவு சதவீதப் போக்குகளை விரைவாகத் தெரிந்துகொள்ளவும் உதவும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் வசதியை மேம்படுத்துவதையும், தேர்தல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ECINet, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையின் கீழ், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
ECINET செயலி குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த ஒற்றைச் செயலியாகும். இது தேர்தல் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட தனித்தனி செயலிகள் மற்றும் இணையதள சேவைகளை, குடிமக்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஒரே இடைமுகத்தின்கீழ் ஒருங்கிணைக்கிறது; மேலும் வாக்காளர் பதிவு, நிகழ்நேர வாக்குப்பதிவுத் தரவுகள் மற்றும் வேட்பாளர் தகவல்கள் போன்ற சேவைகளை ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளிலும் வழங்குகிறது.
இச்செயலியை Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.