

மின்சாரத் துறையின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ‘தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் என்னென்ன மாயாஜாலங்கள் அரங்கேறின என்பதை ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது’ என்று கூறினார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று (ஜன்18-ம்தேதி) கூடியது.
இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுக, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் (Political inducements) ஈடுபடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. மேலும் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த மூன்று நாட்களும் வினா-விடை நேரம் கிடையாது என்று சபாநாயகர் அறிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
புதிய அரசின் தொடக்க நாளே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே நேரடி மோதலாக மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், தமிழக மின்சார வாரியத்தின் (TANGEDCO)தற்போதைய நிதி நிலைமை, கடந்த கால நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் மிக விரிவான 'வெள்ளை அறிக்கை' (White Paper) அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அதாவது கடந்த ஜூன் 16-ம்தேதி தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டு இருந்தார்.
அதில் கடந்த 2021 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான 5 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் மொத்த நிதிச்சுமை வரலாறு காணாத வகையில் ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1,28,934 கடன் சுமை உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இது ‘வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை’ என்றும் இயலாமையை மறைக்கும் நாடகமென கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் அறிக்கையின் சூடே இன்னும் குறையாத நிலையில், தற்போது புதிதாக மின்சார துறையின் கடந்த கால நிர்வாக முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பது கடந்த ஆட்சிகாலத்தில் பெரிய புள்ளிகள் தலையில் இடியை இறக்கியுள்ளது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் (2021-2023) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காகச் சுமார் 44,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 25 KVA முதல் 500 KVA வரையிலான மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில், ஏலதாரர்களுக்கு முறையற்ற ஆதாயம் அளிக்கப்பட்டு அரசுக்குச் சுமார் ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகப் புகார்கள் பதிவாகின. இந்த முறைகேடு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், கடந்த காலத்து 'புள்ளிகள்' பலருக்கு இப்போதே வேர்க்கத் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கே நடக்கும் மின்வெட்டுகளுக்குப் பின்னால் வெறும் 'தொழில்நுட்பக் கோளாறு' மட்டுமில்லாமல், மின்சாரத் துறையிலேயே இருந்து கொண்டு உள்வேலை பார்க்கும் ஒருசில 'கறுப்பு ஆடுகளின்' கைவரிசையும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்குப் பின்னணியில் இருக்கும் அத்தனை டிஜிட்டல் மற்றும் ஆவணப் பூர்வமான ஆதாரங்களையும் தவெக அரசு கச்சிதமாகத் திரட்டித் தன் கையில் வைத்துள்ளது.
பொதுமக்களின் வரிப்பணம் எங்கே போனது என்ற உண்மையை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத் துறையில் எப்படியெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகள் நடந்துள்ளது, தேவையின்றியும், கூடுதல் விலைக்கும் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் வாங்கப்பட்டது எப்படி? மின்சார வாரியம் தற்போது எத்தனையாயிரம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது? என்பது போன்ற அனைத்து உண்மைகளும் அந்த வெள்ளை அறிக்கையின் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற மறுகணமே கூடிய விரைவில் தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு குறிப்பாக முந்தைய ஆட்சியை சேர்ந்தவர்களுக்கு பலருக்கும் தூக்கி வாரி போட்டுவிட்டது.
நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன், திமுக ஆட்சியில் கடன் இருமடங்கானது, அரசின் வரவு செலவு கணக்குகள், நிதி நிலை, கடந்த திமுக அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கடன் இருக்கிறது என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தன.
அதிலும் தமிழகத்தில் மின் துறை மீதுதான் அதிக கடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, தமிழ்நாடு மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மாநில அரசின் நிதிநிலைமைக்கு பெரும் சுமையாக உள்ளது.
இப்படியான சூழ்நிலையில், தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் என்னென்ன தில்லுமுல்லுகள் அரங்கேறி இருக்கின்றன என்பதை ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில், மின்சாரத்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு, மின்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டின் கடன் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த வாரம் மின்சாரத்துறையில் என்னென்ன தில்லுமுல்லுகள் அரங்கேறி உள்ளன என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.