

மின்சாதனங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், மின் பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இயற்கையாக கிடைக்கும் கழிவு பொருட்களைக் கொண்டு, தற்போது மின்சார தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது பிரபல தனியார் நிறுவனம். இதன்படி நெற்பயிர் விவசாயத்தில் கழிவாக கிடைக்கும் வைக்கோலைப் பயன்படுத்தி மின்சாரத் தயாரிப்பை சாத்தியமாக்கி உள்ளது SAEL (Sustainable & Affordable Energy for Life) நிறுவனம்.
இதற்கான பல கட்ட சோதனைகள் நிறைவில் பெற்றதால், மின்சார உற்பத்தியை தொடங்குவதற்காக 20 லட்சம் டன் வைக்கோலை கொள்முதல் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக விளஙகும் SAEL நிறுவனம், நெல் உமி மற்றும் வைக்கோலை பிரதான மூலப்பொருளாக கொண்டு மின்சாரத்தைத் தயாரிக்க உள்ளது. நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.
வைக்கோலைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகளுக்கு மற்றொரு வருமானம் தரக்கூடிய வழியாக இது பார்க்கப்படுகிறது. நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு வைக்கோலை மாட்டுத் தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதோடு ஒரு சில விவசாயிகள் வைக்கோலை விற்பனையும் செய்கின்றனர். SAEL நிறுவனம், வைக்கோலில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பதன் மூலம், தேவைக்கு அதிகமான வைக்கோலை விவசாயிகளால் விற்பனை செய்து லாபத்தை ஈட்ட முடியும்.
ஒரு சில விவசாயிகள் அறுவடை முடிந்த பிறகு, நிலத்தை பண்படுத்த வைக்கோலை வயலிலேயே எரித்து விடுவார்கள். இனி விவசாயிகள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நிலத்தைப் பண்படுத்த வேறொரு வழியைப் பயன்படுத்திக் கொண்டு வைக்கோலை விற்பனை செய்ய விவசாயிகள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைக்கோல் மற்றும் நெல் உமி உள்ளிட்ட நெற்பயிர் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை தயாரிக்க ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 165 மெகா வாட் திறன் கொண்ட 11 ஆலைகளை நிறுவியுள்ளது SAEL நிறுவனம். நடப்பாண்டில் நெல் விதைப்பு பருவம் தொடங்கியுள்ள நிலையில், அறுவடையின் போது 20 லட்சம் டன் வைக்கோலை வாங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விவசாய கழிவுகளை ‘எரிபொருள் அக்ரிகேட்டர்’ மூலம் தூய்மை மின்சாரத் தயாரிப்புக்கு பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாயக் கழிவுகளை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்குவதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் இளம் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.
இதனால் இம்முறை SAEL நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வைக்கோல் கிடைக்குமா என்பதிலும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மின்சார தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது SAEL நிறுவனம்.