டிரம்புடன் முற்றிய மோதல்: அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்
ஆசை அறுபதுநாள்... மோகம் முப்பது நாள்...
இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், அவருடைய நெருங்கிய நண்பரான உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கும் மிக கச்சிதமாக பொருந்தும்.
அவர்கள் இருவரது நட்பும் மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது டிரம்ப் கொண்டு வந்த உள்நாட்டு கொள்கை மின் மசோதா.
இந்த மசோதா தனது நிறுவனத்துக்கு எதிராக அமையும் என்று எலான்மஸ்க் கருதுகிறார். அதனால் ஏற்பட்ட பிணக்கு, சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் அளவுக்கு மோதலாக மாறியநிலையில் தற்போது எலான்மஸ்க் புதிய கட்சி தொடங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர் எலான்மஸ்க். இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாசாவுடன் இணைந்து விண்வெளித்துறையில் தடம் பதித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பளாரான டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது தனது தொழிலுக்கு டிரம்ப் மிகவும் உதவிகரமாக இருப்பார் என்று கருதிய உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழில் அதிபருமான எலான் மஸ்க், டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பெரும் தொகையை நிதியாக கொடுத்தார். அவருக்கு ஆதரவாக பல்வேறு யுத்திகளை மேற்கொண்ட மஸ்க் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்தாண்டு தொடக்கத்தில் வாஷிங்டனில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறை பதவியேற்றார். இப்படியாக அவர்களது நட்பு மலர்ந்து, நெருக்கமானது.
அப்போது தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்குக்கும் பொறுப்பு கொடுத்தநிலையில் அவரும் பதவியேற்று கொண்டார். அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக ‘டாட்ஜ்’ என்ற புதிய இலாகா உருவாக்கப்பட்டு அதன் தலைவராக எலான் மஸ்க் பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த மாதத்தில் அவர் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் டிரம்புக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்தது.
அது வார்த்தை போராக மாறியது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற பெருமளவு நிதியுதவி செய்தேன் என்றும், ஆனால் டிரம்ப் நன்றி கெட்டவர் என்றும் மஸ்க் வசைபாடினார். இதற்கு பதிலடியாக அவரது நிறுவனத்துக்கான அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என டிரம்ப் மிரட்டினார்.
இதனையடுத்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு மற்றும் கும்பலில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக மஸ்க் கூறினார். இதனிடையே டிரம்பின் அழுத்தம் காரணமாக அவர் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று மஸ்க் திடீரென பின்வாங்கினார்.
இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் புதிய வரி மசோதாவை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். இதற்கு எலான் மஸ்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த மசோதா நாட்டிற்கு பெரும் கேடு என தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளம் மூலமாக பிரசாரம் செய்து வந்தார்.
இந்த வரிவிதிப்பு மற்றும் செலவு மசோதா அமெரிக்காவின் கடனை அதிகரிக்கும் என்றும், நாட்டின் 20 சதவீதத்தினரை திருப்திப்படுத்துவற்கான வரிவிதிப்பு என்றும், அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி தண்டிப்பேன் எனவும் உறுதியாக கூறினார்.
அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை (4-ந் தேதி) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது மஸ்க், புதிய கட்சியின் தேவை குறித்து தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் எக்ஸ் வலைத்தளம் வாயிலாக வாக்கெடுப்பு நடத்தி ஆதரவு கோரினார். இதற்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு அளித்தனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். ‘அமெரிக்கா கட்சி’ (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர் தன்னுடைய குரல் மற்றும் திட்டங்களை இதன் மூலம் செயல்படுத்த முடிவு செய்தார்.
“நம்முடைய நாடு திவாலாகி கொண்டிருக்கிறது, கொள்ளையடிக்கப்படுகிறது. உங்களுடைய சுதந்திரம் திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி தொடங்கப்படுகிறது” என்று பதிவிட்டார். எலான் மஸ்க்கின் இந்த முடிவு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என அமெரிக்க மக்கள் காண ஆவலுடன் உள்ளனர். அமெரிக்காவில் பல கட்சிகள் நடைமுறை இருந்தாலும் காலங்காலமாக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என 2 கட்சிகளே மாறிமாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘கூடா நட்பு கேடாய் முடியும்’...??