

2026 தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், இது அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமான நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை(ஏப்ரல் 6) மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதியும், மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9-ம் தேதியும் ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிவுகளை மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதேபோல, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடிப்பாடி பழனிசாமி, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். முதல்முறையாக தேர்தல் களத்தில் நுழைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வருகை மற்றும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறைகளைச் சீராகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாக குறிப்பிட வேண்டும் என்றும் எந்தவொரு தகவல்களும் விடுபடகூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒரு வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தில் (Affidavit) (படிவம் 26), சொத்து-கடன் விவரங்கள், குற்றப்பின்னணி, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், தண்டனை விவரங்கள், கல்வித்தகுதி, பான்கார்டு, வருமான வரி விவரம், தொடர்பு விவரங்கள், சமூக ஊடகக் கணக்குகள் என அனைத்தையும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கிடையே இ-மெயில்(E-Mail) முகவரியை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம்தேதி சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்களை பற்றி விவரங்களை முழுமையாக சமர்ப்பிப்பது சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிசெய்யும் பொறுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரத்தில், இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வேட்பாளர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
வேட்பாளர் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரத்தில் ஏதேனும் ஒருபகுதி நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் வழங்க வேண்டும். அந்த நோட்டீசை பெற்றவுடன் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரும், வேட்பாளர் முழுமையான விவரங்களுடன் கூடிய உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யத் தவறினால் வேட்புமனு பரிசீலனையின் போது அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும் எனறு கூறப்பட்டுள்ளது.
வேட்பாளரின் உறுதிமொழிப் பத்திரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். வேட்பாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) Know Your Candidate செயலியைப் பயன்படுத்தலாம்.
அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் மற்றும் படிவம் 7-A ஆகியவற்றை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளத்தில் elections.tn.gov.in காணலாம்.