
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்கேற்ப வங்கிகள் பல சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. தற்போதைய நிலையில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும், தனியார் வங்கிகளில் தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
என்ன தான் பல சலுகைகளை வங்கிகள் வழங்கினாலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான ஒரு முடிவை பொதுத்துறை வங்கிகள் எடுக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பொதுவாக சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தனியார் வங்கிகள் வசமே உள்ளனர். சம்பளக் கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் தான், தனியார் வங்கிகளை பலரும் நாடுகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை விஷயத்தில் சற்று தளர்வை அளிக்க முன்வந்துள்ளன. அதாவது, இனி குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் பராமரிக்காவிட்டாலும் அபராதம் ஏதும் வசூலிக்கப்படாது என்ற முடிவை வங்கிக் எடுத்துள்ளன. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஏற்கனவே குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தை நிறுத்தி விட்டன. இந்த நடைமுறையை மற்ற பொதுத்துறை வங்கிகளும் பின்பற்றுவது குறித்து சமீபத்தில் பரிசீலிக்கப்பட்டது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளின் நிகர இலாபத்தைக் காட்டிலும், அபராதத் தொகை அதிகமாக வசூலிக்கப்பட்ட விவகாரம் சமீபத்தில் வெளியானது. அதோடு மத்திய நிதி அமைச்சக கூட்டங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதன் காரணமாகவே பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதத்தைக் கைவிட முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அபராதத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஈடு செய்ய, ஏடிஎம் பரிவர்த்தனை மற்றும் நெட் பேங்கிங் கட்டணம் உள்ளிட்ட சில வங்கிச் சேவைகளின் கட்டணத்தை அதிகப்படுத்தலாம் எனவும் பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டு வருகின்றன.
குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான அபராதம் ரத்து செய்யவிருப்பது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக நன்மையளிக்கும்.