

நடந்து முடிந்த 234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு ஆதரவு கொடுத்ததால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து தவெகவிற்கு இடதுசாரிகள் கட்சிகள், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்த நிலையில் கடந்த 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையின் கடந்த 16-ம்தேதி முதலமைச்சருடன் 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், நேற்று இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதுடன் இதுவரை மொத்தமாக 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை உண்மையாக்குவது போல் டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என்று மக்களுக்கு தேவையானதை விஜய் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களுக்கு நிகராக எதிர்ப்புக் குரல்களும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.
தவெக தலைமையிலான விஜய் அரசு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தினமும் கூவி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் விஜய் அதனை எதையும் காதில் வாங்காமல் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைதியாக ஒவ்வென்றையும் சம்பவங்களையும் தரமாக செய்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு, ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதில் கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை சுலபமாக சமாளித்துவிடுவார். TVK ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்ற விமர்சனத்தை சீரியஸாக எடுக்க தேவையில்லை, அது வெறும் அரசியல் விமர்சனம் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி விஜய்யின் அரசை பாராட்டி பேசியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தவெகவின் ஆட்சி முறையை திமுக விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் சரியான பாதையில் செல்கின்றன என்பதற்கான ஓர் அறிகுறியாகவே நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் எதிர்பார்க்காத படுதோல்வியைச் சந்தித்துள்ள திமுகவினர் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்கவும் தொடர்ந்து கத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆட்சி மாறலாம். ஆனால் காட்சி மாற நேரம் ஆகும். புதியதாக எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் தகுந்த கால அவகாசம் வழங்க வேண்டும். பலர் அரசியல் களத்திற்குப் புதியவர்கள் என்பதால், கற்றுக் கொள்வதற்கும் நிர்வாகத்தைச் சீரமைப்பதற்கும் உரிய கால அவகாசம் தேவை.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெக ஆதரிப்பது என்பது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தான் நான் பார்க்கிறேன். தோற்றாகி விட்டது அதிலும் அதிபயங்கர தோல்வி. ஒரு ஓட்டு வித்தியாசத்திலும் கூட தோற்று உள்ளனர். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான திமுகவுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை.
தோற்றதை ஒப்புக்கொள்ள முடியாமல் உதயநிதி அடுத்த 5 ஆண்டுகளுக்கு கதறுவதை நாம் கேட்டு ரசிக்கலாம். இதற்காகவே நான் விஜய்யின் பெரும் ரசிகையாக ஆகி விட்டேன் என்றும் கஸ்துரி பேட்டி அளித்துள்ளார்.
அதேசமயம், கஸ்தூரி திமுகவை விமர்ச்சிக்கும் வகையில் சில வார்த்தைகளை பேசியிருப்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திமுக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி, ‘தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சியமைக்கும் விஜய்’ என பதிவிட்டு விஜயை கலாய்த்ததுடன், எங்களுக்கு(திமுக) பிடிக்காத சட்டங்களை நிறைவேற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாசத்துல தவெக ஆட்சியை கவிழ்ப்போம் என்று திமுகவிற்கு ஆதரவாக விஜய்க்கு மிரட்டல் விடும் தோணியில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது திமுகவை தாக்கி முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக நடிகை கஸ்துரி பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் ‘சபாஷ் சரியான போட்டி’ என்று விமர்ச்சித்து வருகின்றனர்.