

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தவெக 41 சதவீத ஓட்டுகள் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் விஜய் ஆட்சி அமைப்பார் என்று முதலில் கருத்து கணிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி.
முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
1991-ம் ஆண்டு தமிழக காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான ரவி, 32 ஆண்டுகள் பணிபுரிந்து டிஜிபி ரேங்கில் 2022-ல் ஓய்வு பெற்றார்.
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் 250 முதல் 400 பூத்கள் இருக்கும். அதில் 1000 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கருத்து கணிப்பு நடத்தியுள்ளார்.
தொகுதிக்கு 10 பேர் என ஓய்வுபெற்ற போலீசார் 2340 பேர் வாயிலாக 2.34 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவை அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரின் கருத்து கணிப்பில் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அவர் கணித்தது போலவே தவெக 40 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பெற்று சாதனை படைத்தது.
31 ஆண்டுகள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதில் கிடைத்த கள அனுபவம், அரசியல் நிலவரங்களை துல்லியமாக கணிக்க எனக்கு பெரிதும் உதவியது என்றும் கூறினார்.
விஜய் பணி செய்ய அழைத்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு, முதலில் அழைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், போதைப்பொருள் தடுப்பு என்று மக்களுக்கு தேவையானதை விஜய் முதலில் செய்துள்ளதாக பாராட்டினார். மேலும் அரசியல் சார்பு இல்லாமல் அதிகாரிகளை விஜய் தேர்வு செய்து வருவதாகவும் கூறினார்.
திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று வேண்டும், சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும், முந்தைய திட்டங்கள் தொடர வேண்டும், அன்றாடம் எந்த பிரச்னையும் இருக்க கூடாது, இதைதான் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
கட்சி ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை சுலபமாக சமாளித்துவிடுவார். TVK ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்ற விமர்சனத்தை சீரியஸாக எடுக்க தேவையில்லை, அது வெறும் அரசியல் விமர்சனம் தான் என்றார்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்ற முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு 100 சதவீதம் பாராட்டுக்குரியது. மக்கள் நலனுக்கு அவர் கொடுத்துள்ள இந்த முன்னுரிமைக்காக, கடந்த 10 நாள் ஆட்சியை மதிப்பிட்டு CM விஜய்க்கு நான் 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.