

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் மற்றும் சேவைகளை உடனுக்குடன் வழங்கும் வகையில் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை (WhatsApp Channel) அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட் ஒன்றும் விரைவில் அறிமுகமாக உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவசியமான தகவல்களையும் உடனுக்குடனான அறிவிப்புகளையும் விரைவாக வழங்குவதற்காக, அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெற இந்தச் சேனலில் இணையுமாறு உறுப்பினர்களை கேட்டு கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் இணையதளப் பக்கத்திற்கு (portal) மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அவசியமின்றி, PF உறுப்பினர்களுக்குத் தகவல்களை நேரடியாக அவர்களின் மொபைல் போன்களிலேயே வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
பிஎஃப் கணக்கு தொடர்பான புதிய அறிவிப்புகள், அரசின் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுத் தகவல்கள் இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம் நேரடியாகப் பெறலாம். EPFO வழங்கும் கியூஆர் கோடு (QR Code) அல்லது அதிகாரப்பூர்வ இணைப்பு மூலம் இதை எளிதில் அடையலாம்.
EPFO-வின் அதிகாரப்பூர்வ இணையதளம், உறுப்பினர்களுக்கு EPF முன்பணம், EPF திரும்பப் பெறுதல், UAN செயல்படுத்துதல், கோரிக்கைகள் மற்றும் பரிமாற்றங்கள், KYC மற்றும் ஓய்வூதியம் தொடர்பான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. பிற இணையதளங்களை தேட வேண்டிய அவசியமின்றி, வாட்ஸாப்பிலேயே இத்தகவல்கள் கிடைக்கும்.
இருப்பினும், இது பொதுவான தகவல்களை வழங்கும் ஒரு தளம் மட்டுமே என்பதால், இதன் வாயிலாக தனிப்பட்ட கணக்கு இருப்பை சரிபார்ப்பதோ, முன்பணம் மற்றும் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பதோ முடியாது; மேலும் தனிப்பட்ட குறைகளை தீர்க்கும் உரையாடல் தளமாகவும் இதை பயன்படுத்த இயலாது.
மேலும், கணக்கில் உள்ள மீதித்தொகை (Balance), வழக்கமான பாஸ்புக் விவரங்கள் மற்றும் பிஎப், பணத்தை திரும்ப பெற மற்றும் பணம் எடுக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வ 'உமங்' செயலி (UMANG App) அல்லது அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டல் ‘https://www.whatsapp.com/channel/0029Vb6kmH48Pgs8ftd6Kw3Y’ தொடர்ந்து பயன்படுத்துவதே பாதுகாப்பானது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யு.பி.ஐ., வாயிலாக பி.எப்., கணக்கிலிருந்து நேரடியாக வங்கி கணக்கிற்கு பணம் எடுக்கும் வசதிக்கான சோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்த வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
குறிப்பாக உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ EPFO வாட்ஸ்அப் கணக்குகளை மட்டும் பயன்படுத்தவும். ஒருபோதும் ஓடிபி (OTP), கடவுச்சொற்கள், [Aadhaar Redacted] விவரங்கள் அல்லது வங்கிச் சான்றுகளை அதிகாரபூர்வமற்ற எண்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ நீல நிற 'வெரிபைடு டிக்' (Verified Tick) கொண்ட EPFO Official Website அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் போலி கணக்குகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேவையைப் பெறுவது எப்படி?
சரிபார்க்கப்பட்ட இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் எண்ணுக்கு "Hello" என அனுப்ப வேண்டும்.
உங்கள் மொபைல் எண் யூஏஎன் (UAN) உடன் இணைக்கப்பட்டுள்ளதா எனச் சிஸ்டம் சரிபார்க்கும்.
சரிபார்ப்பு முடிந்ததும், தேவையான சேவையைத் தேர்ந்தெடுத்து வழிமுறைகளைப் பின்பற்றி விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தச் சாட்பாட் வட்டார மொழிகளையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் தகவல்களைப் பெறலாம்.
24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கும். போர்ட்டலைத் தேடி மீண்டும் மீண்டும் லாகின் செய்யும் அவசியமின்றி, வாட்ஸ்அப்பிலேயே பேலன்ஸ் மற்றும் கிளைம் ஸ்டேட்டஸை எளிதாகக் கண்காணிக்கலாம்.