

நாட்டில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கும் மறறும் நிறுவனத்தின் பங்கும் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகைக்கு கூட்டு வட்டி முறையில் மத்திய அரசு வட்டியை செலுத்துகிறது.
இந்நிலையில் பிஎப் பணம் பிடிப்பதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்ய உள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வரும், வரிச்சலுகைகள் என்னென்ன மற்றும் விவசாயிகளுக்கு என்னென்ன அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத் தொடங்கி விட்டது.
நாளை மறுதினம் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில், பிஎப் வாடிக்கையாளர்களுக்கான கட்டாய சம்பள உச்ச வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரை ரூ.6,500 ஆக இருந்த சம்பள உச்சவரம்பு, ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த உச்ச வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் பட்சத்தில், குறைந்த சம்பளம் வாங்குபவருக்கு இது பயனுள்ளதாக அமையும். அதாவது இந்த விதி அமலுக்கு வந்தால், இனி ரூ.25,000-த்திற்கும் கீழே சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் பிஎப் தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் அப்படியே வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்றாலும், வருங்கால சேமிப்பு பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிஎப் பணத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகும் வகையில், தற்போது விதிகளைத் தளர்த்தி வருகிறது EPFO நிறுவனம். இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டதன் காரணத்தால், பொதுமக்களால் பிஎப் சேவைகளை எளிதாக அணுக முடியும். இந்நிலையில் பிஎப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திருமணம் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக எடுக்கும் புதிய வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தவிர ஏடிஎம்மில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியும் விரைவில் வரவுள்ளது. EPFO விதிகளை தளர்த்தியதன் காரணமாக பிஎப் கணக்கில் சேமிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் கட்டாய சம்பள உச்ச வரம்பை அதிகரிப்பதால், ஊழியர்களின் வருங்கால சேமிப்பு கேள்விக்குறியாகி விடும். இந்த வசதி நிதி நெருக்கடிக்கு ஆளாகும் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்