EPFO உச்சவரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு: யாருக்கெல்லாம் பயன்? முழு விவரம்!

பி.எஃப் உச்சவரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
EPFO|பிஎஃப் பணம்
EPFO|பிஎஃப் பணம்image credit-appreciatewealth.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) பிடித்தத்துக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 51 லட்சம் பேர் கூடுதலாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பிஎஃப் (PF) ஊதிய வரம்பு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இந்த ஊதிய வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு மற்றும் முறைசார் வேலைவாய்ப்பின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்த ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய மாற்றம் இன்று ( செப்டம்பர் 17-ம்தேதி) முதல் அமலுக்கு வரும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​மாதத்துக்கு ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் புதிய ஊழியர்கள் பிஎஃப் வரம்புக்குள் வருவதில்லை. இதனால் அவர்கள் கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை பெற முடிவதில்லை.

அதாவது, ரூ.25,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புக்கான பிஎஃப் பங்களிப்பு கட்டாயமாகும். இந்த வரம்பைத் தாண்டி அதிக ஊதியம் பெறுபவர்கள் விருப்பப்பட்டால் கூடுதல் பங்களிப்பு செய்யலாம்.

தற்போது ஊதிய வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதன் மூலம், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலான ஊதியப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பிஎஃப் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 8 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வருவார்கள்.

பிஎஃப் ஊதிய வரம்பு
பிஎஃப் ஊதிய வரம்புAI Image

மேலும், புதிதாக 51 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கட்டாய வரம்புக்குள் வருவார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,089 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தற்போது இந்த செலவுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.10,250 கோடி ஒதுக்கப்படும் நிலையில் புதிய நடைமுறை மூலம் ஆண்டு செலவு சுமார் ரூ.11,339 கோடியாக அதிகரிக்கும்.

அதேசமயம் பிஎஃப் ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான இபிஎஸ்-க்கு (EPS) வழங்கப்படும் மாதாந்திர பங்களிப்பின் உச்சவரம்பும் ரூ.1,250-ல் இருந்து ரூ.2,080 ஆக உயரும்.

இதையும் படியுங்கள்:
வேலை விலகிய பின் பிஎஃப் பணத்தை முழுமையாக எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
EPFO|பிஎஃப் பணம்

ஊழியரும் நிறுவனமும் தலா 12 சதவீதத்தை (அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உள்ளிட்ட தொகையிலிருந்து) பிஎஃப் (PF) கணக்கிற்குச் செலுத்துகின்றனர்.

ஊழியர் செலுத்தும் 12 சதவீதமும் பிஎஃப் கணக்கிலும், நிறுவனத்தின் 12 சதவீத பங்களிப்பில் 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கிலும், 8.33 சதவீதம் ஓய்வூதியத் திட்டத்திலும் சேர்க்கப்படுகிறது.

ஊழியரின் ஓய்வூதியத்திற்காக மத்திய அரசு 1.16 சதவீதம் பங்களிக்கும் அதேவேளையில், இத்திட்டத்திற்கு ஊழியர் தனியாகப் பணம் செலுத்த வேண்டியதில்லை.

புதிய ஊதிய வரம்பால் ஒரு ஊழியரின் மொத்த பிஎஃப் பங்களிப்பு சராசரியாக மாதம் ரூ.600 வரை அதிகரிக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு அதிகரிக்கும் என்பதுடன் ஊழியர்களுக்கான காப்பீட்டுப் பாதுகாப்பும் விரிவடையும்.

இதையும் படியுங்கள்:
பிஎஃப் பணம் எடுப்பதில் புதிய மாற்றம்! உங்கள் கணக்கில் இருந்து 75% வரை பெறுவது எப்படி?
EPFO|பிஎஃப் பணம்

ஒட்டுமொத்தமாக, புதிய மாற்றம் மூலம் அதிகமான ஊழியர்கள் பிஎஃப் சேமிப்பு, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்புக்குள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com