

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்துள்ளது.
இதனால் அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் அக்கட்சியின் 47 எம்.எல்.ஏ-க்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனக்கு தான் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் பதவி என்று எடப்பாடி பழனிசாமியும், ஆனால் நான் தான் தலைவர், எனக்கு தான் அதிகபெரும்பான்மை இருக்கிறது என்று கூறி வேலுமணியும் தனித்தனியாக சபாநாயகர் கருப்பையாவிடம் மனு கொடுத்தனர்.
இதன்படி எம்.எல்.ஏ-க்கள் இரு அணிகளாகப் பிரிந்து தற்காலிக சபாநாயகரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி 30 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கினர். மற்றொரு தரப்பினர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் கடிதம் வழங்கியுள்ளனர். இருப்பினும், மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் வெறும் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிக்காக எஸ்.பி. வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள இந்தப் போட்டி அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வின் இந்த உட்கட்சிப் பூசல் எந்த மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இது குறித்து சட்ட நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க...
தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் கட்சித்தலைமை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆகிய இரண்டுமே மிக முக்கியம். பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூடி ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள். இவரே சட்டமன்றத்தின் அந்த கட்சியின் குரலாக இருப்பார்.
இந்த பதவிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் அல்லது உயர்மட்டக்குழு ஒருவரை பரிந்துரைக்கலாம். இறுதியாக அந்த பரிந்துரையை எம்எல்ஏக்கள் ஏற்று முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் ஒரு கடிதத்தையும், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் மற்றொரு கடிதத்தையும் அளித்தால், அது ஒரு தலைமை போராட்டமாக உருவெடுக்கும். இதில் இறுதி முடிவை சட்டமன்ற சபாநாயகர் எடுப்பார். அதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சபாநாயகர் முதலில் அந்தக்கட்சியின் சட்டவிதிகளை ஆய்வு செய்வார். அந்த கட்சித்தலைமைக்கு சட்டமன்ற கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் உள்ளதா என்று பார்ப்பார்.
அதாவது வெறும் எம்எல்ஏக்கள் மட்டும் சேர்ந்து ஒருவரை நியமிக்க முடியாது. அதற்கு கட்சித்தலைமை அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
எப்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறும் என்றால் அவர்கள் இரண்டில் மூன்று பங்குக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் அதாவது அ.தி.மு.க.வில் உள்ள 47-ல் 32 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று நாங்கள் தான் அசல் கட்சி என்று உரிமை கோரும் போது அல்லது வேறொரு கட்சியுடன் இணையும்போது மட்டுமே.
தற்போதைய சூழலில் கட்சியின் பொதுச்செயலாருக்குதான் ‘விப்’ எனப்படும் கொறாடாவை நியமிக்கும் அதிகாரமும், கட்சியின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் அதிகாரமும் உள்ளது. எம்எல்ஏக்கள் கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக ஒருவரை நியமித்தால் அது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.
ஒரு கட்சித்தலைமை தான் சட்டமன்ற தலைவரை பரிந்துரைக்கும். ஆனால் அந்த தலைவர் சட்டமன்றத்தில் செயல்பட எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை மோதல் ஏற்பட்டால் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘பொது செயலாளர்’ யாரோ, அவர் கொடுக்கும் கடிதமே சட்டப்படி வலுவானதாக கருதப்படும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here