இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ளது மவுண்ட் எட்னா எரிமலை. உலகில் இயக்கத்தில் உள்ள ஸ்ட்ராடோ வகை எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். ஸ்ட்ராடோ எரிமலைகள் கூம்பு வடிவத்தில் இருக்கும். எரிமலை குழம்புகள் உருகி சுற்றிலும் படர்ந்து, அந்த இடம் இறுகிய பாறைக் குழம்புகளால் மூடப்பட்டு இருக்கும்.
மவுண்ட் எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 3403 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய எரிமலையாக உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வேசுவியஸ் என்ற பெரிய எரிமலையை விட இரண்டு மடங்கு பெரியது. இந்த எரிமலை அடிக்கடி வெடித்து சிதறக் கூடிய ஒன்றாக உள்ளது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் மவுண்ட் எட்னா எரிமலை பனி படர்ந்த ஒரு எரிமலை ஆகும்.
இந்த எரிமலை வெடிப்பு வரலாறு 500,000 ஆண்டுகளுக்கு முந்தையது. மவுண்ட் எட்னாவின் எரிமலை வெடிப்புகள் பற்றிய குறிப்புகள் 2700 ஆண்டுகளாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் உயரமான பனி படர்ந்த மலையில் இருந்து வெளிவரும் லாவா குழம்பின் சாம்பல் துகள்கள் சுற்று வட்டாரங்களில் படிந்து விவசாயப் பகுதிகளை வளமாக்கியுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் மவுண்ட் எட்னா எரிமலையும் இடம் பெற்றுள்ளது .
தற்போது மவுண்ட் எட்னா எரிமலை செயற்கைக் கோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எரிமலை வெடிப்பினை பற்றிய தகவல்களை உடனுக்குடன் வழங்குகிறது. இதன் காட்சிகள் விண்வெளியில் இருந்து படம் பிடிக்கப்பட்டு அது ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் எரிமலையின் செயல்பாடுகள் பற்றி அறிய முடிகிறது. மேலும் சிசிலி தீவில் உள்ள மக்களை எச்சரிக்கை செய்து எரிமலை வெடிப்பு நேரத்தில் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றவும் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயரவும் முயற்சிகளை விரைவாக மேற்கொள்ள முடிகிறது.
இந்த மாத தொடக்கத்திலிருந்து மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து எரிமலை வெடிப்பிற்கான முன் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன. மலையில் ஏற்படும் அதிர்வுகள் மூலம், அங்கு புகை உருவாவதை படம் பிடித்து எரிமலை வெடிக்க இருப்பது இருப்பதை கண்டறிந்தனர். பிப் 8ஆம் தேதி மாலை 6.35 மணியளவில் எட்னா எரிமலை வெடித்து எரிமலை குழம்புகளை கக்க ஆரம்பித்தது. ட்ரோன்கள் மூலம் இந்த காட்சிகளை ஆய்வு செய்து இத்தாலி தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் துறை வெளியிட்டுள்ளது.
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு இதுவரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பரவி உள்ளது. அதிக வெப்ப நிலையில் இருக்கும் எரிமலை குழம்பு அங்கங்கே சிறிய அளவில் வெடிப்பையும் ஏற்படுத்தும் திறன் மிகுந்தது. எரிமலை வெடிப்பு வழக்கமாக ஏராளமான சாம்பலை சுற்றி வெளியில் பரப்பும்; அதே நேரம் அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கும். ஆனால் எட்னா எரிமலை பெரிய அளவில் புகையையும் சாம்பலையும் வெளிப்படுத்தாமல் லாவாவை மட்டும் வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப் படவில்லை.
தற்போது எட்னா எரிமலை வெடிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பனிபடர்ந்த வெள்ளை மலைகளின் நடுவில் உருகிய தங்கம் போல எரிமலை குழம்பு ஆறாக ஓடி வருவது காண்பவரின் கண்களை விரிய வைக்கிறது. அதே நேரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.