
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் வரை 1051 சுங்க சாவடிகள் இருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் 78 டோல்வே என்று அழைக்கப்படும் சுங்கச்சாவடிகள் உள்ளன. பயணிகளின் வசதிக்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் பயணிகள் சிரமத்தை மேலும் குறைக்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் சலுகை பெறும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்திய வருடாந்திர பாஸ் முறை கடந்த 15-ம்தேதி முதல் அமலுக்கு வந்தது.
வருடாந்திர பாஸ் திட்டத்தின் மூலம் ஓராண்டு பாஸ் பெற விரும்பும் பயனர்கள் 3,000 ரூபாயை ‘ராஜ்மார்க்யாத்ரா’ (Rajmargyatra)செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்திய, 2 மணி நேரத்திற்குள் ‘பாஸ்’ செயல்பாட்டுக்கு வந்து விடும்.
ஒருமுறை 3000 கட்டணம் செலுத்தி, ஓர் ஆண்டு செல்லுபடியாகும் அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு இது கிடைக்கிறது. இதன் மூலம், ஃபாஸ்டேக்கை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.
3000 ரூபாய் பாஸ் செல்லுபடியாகும் இடங்கள்:
இந்த வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ், தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் (NE) உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில அல்லது தனியார் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இது செல்லுபடியாகாது என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஃபாஸ்டேக் வைத்திருக்கும் பயனர்கள், புதிய ஒன்றைப் பெறத் தேவையில்லை. அவர்களின் தற்போதைய ஃபாஸ்டேக்கிலேயே இந்த பாஸை செயல்படுத்திக்கொள்ளலாம். இந்த வருடாந்திர பாஸ் மூலம், பயனர்கள் ஒரு வருடத்தில் சுமார் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை சுங்கச் கட்டணத்தில் சேமிக்க முடியும். இந்த பாஸ், ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதால், இதை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்ற முடியாது. இந்த பாஸ் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் அதாவது Wite Board வாகனங்களுக்கு மட்டும் பொருத்தும். இந்த வசதி தற்போது வணிக வாகனங்களுக்குக் கிடையாது.
FASTag வருடாந்திர பாஸ் வேலை செய்யாத இடங்கள்:
மாநில நெடுஞ்சாலை, மாநிலங்களுக்கு உட்பட்ட விரைவுச் சாலை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் சாலைகளில் FASTag வருடாந்திர பாஸ் செல்லுபடியாகாது. இந்தச் சாலைகளில் கட்டணம் சாதாரண FASTag அமைப்பு மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீங்கள் வருடாந்திர பாஸ் எடுத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க Fastag கட்டணத்தை கட்ட வேண்டியது கட்டாயம்.
அதே போல் உங்களிடம் உள்ள பாஸ்டேக் கட்டணத்தை செலுத்தியும் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் என்றாலும் தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3,000 பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லுபடியாகும் காலம் காலாவதியான பிறகு என்ன நடக்கும்?
வருடாந்திர பாஸ் ஓராண்டு அல்லது 200 பயணங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதில் எது முதலில் வந்தாலும் அதுவரை மட்டுமே பாஸ் முறை செல்லுபடியாகும். அதன்பிறகு இந்த பாஸ் தானாகவே வழக்கமான ‘பாஸ்டேக்’ ஆக மாறி விடும்.
நீங்கள் வருடாந்திர பாஸ் அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு செல்லுபடியாகாது என்பதால் இதற்கு தனியாகவும், அதேபோல் Fastagக்கு தனியாகவும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது சுமையாகவே இருக்கும்.
இந்த வருடாந்திர பாஸ் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்காது. எனவே வருடாந்திர பாஸ் எடுக்க விரும்பும் பயனர்கள் பாஸ் எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டியது மட்டுமல்லாமல் அதில் உள்ள விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அதில் உள்ள விதிமுறைகளை சரியாக படிக்காவிட்டால் உங்கள் பணம் வீணாகும் என்பதை மறக்க வேண்டாம்.