

தமிழக அரசியல் களத்தில், தமிழக வெற்றிக் கழகம் தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொடர்ந்து மாவட்டந்தோறும் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். அவ்வகையில் இன்று தஞ்சையிலும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் பேசவிருக்கிறார்.
கடந்த வாரம் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், எங்கள் கட்சியில் ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் இணையும் என்று தெரிவித்திருந்தார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு பிரச்சினை காரணமாக காங்கிரஸ் தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று வரை அதற்கான அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், மீண்டும் ஒரு முறை தேசிய கட்சியும், மாநில கட்சியும் தவெக-வில் இணைவது உறுதியென இன்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து இருக்கிறார்.
தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், “இளம் வாக்காளர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தை வரவேற்கிறார்கள். இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 12 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு தவெக-விற்கு கிடைக்கும்.
ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் தவெக கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறது. தமிழக முதல்வரின் வீட்டிலும் கூட தலைவர் விஜய்க்கு ஓட்டு இருக்கிறது. எத்தனை கூட்டணிகள் எதிர்த்து வந்தாலும், தவெக-வை வீழ்த்த முடியாது” என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிதாக கட்சியை தொடங்கியுள்ள சசிகலா, தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் தற்போது அவர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததற்கு ஆதரவு தெரிவித்து பேசி இருக்கிறார்.
"துரோகியிடமும், எதிரியிடமும் மண்டியிடாமல் ஒரு புதிய பாதையை செங்கோட்டையன் தேர்ந்தெடுத்து இருப்பதாக” சசிகலா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சசிகலா, தவெக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் செங்கோட்டையின் தலையிட்டு பேசினால், சசிகலா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவதால், கூட்டணியில் தொடரலாமா அல்லது வேறு கூட்டணிக்கு மாறலாமா என்பது குறித்து நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடம் சமீபத்தில் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக தர மறுப்பதால் கூட்டணி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகே, கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் போட்டியிட்டால் நாஞ்சில் சம்பத் சொன்னபடி தவெக கூட்டணியில் தேசிய கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்றே தெரிகிறது.