

இ-ஷ்ரம் அட்டை என்றால் என்ன? இதை யாரெல்லாம் பெற முடியும்? இதற்கான நிபந்தனைகள் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை (UNORGANIZED WORKERS) ஒரே தரவுதளத்தின் கீழ் கொண்டு வருவதற்காக இ-ஷ்ரம் கார்டு தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மத்திய அரசு ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து தொழிலாளிக்கும் 60 வயதுக்குப் பிறகு, மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதன் பெயம் இ-ஷ்ரம் கார்டு (e-Shram card) என்பதாகும். மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் அவரது அடையாளம் மற்றும் தொழில் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும்.
இது ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு, 60 வயதிற்குப் பின் ரூ.3,000 மாத ஓய்வூதியம் (PM-SYM திட்டம் மூலம்) மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற உதவுகிறது. இந்தியாவில் உள்ள 16 முதல் 59 வயதுடைய, வருமான வரி செலுத்தாத அனைத்து தொழிலாளர்களும் இ-ஷ்ரம் கார்டை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இலவசமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கானது. அதாவது, ஓலா, ஊபர், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் தளத் தொழிலாளர்கள் மட்டுமின்றி தினசரி கூலி வேலை செய்பவர்கள், ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலனை பெற முடியும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
வங்கி கணக்கு புத்தக நகல்
இ-ஷ்ரன் அட்டையின் உடனடி பலன்கள்
* விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரையிலும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரையிலும் காப்பீடு கிடைக்கும்.
* எதிர்காலத்தில் பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நேரடி பண உதவி இந்த கார்டு மூலமாகவே உங்கள் வங்கி கணக்கிற்கு வரும்.
* அது ஒரு தேசிய அடையாள அட்டையாகவும் உங்களுக்கு பயன்படும்.
* அதேசமயம் விபத்தில் பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் காப்பீடு கிடைக்கும்.
ரூ.3000 பென்ஷன் திட்டத்திற்கு (PM-SYM) இ-ஷ்ரன் கார்டு உடன் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தில் இணைய வேண்டும்.
தகுதிகள் :
* 18 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் இதில் சேரலாம்.
* உங்கள் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது EPFO, ESIC திட்டங்களில் உறுப்பினராகவோ இருக்கக்கூடாது.
* நீங்கள் வயதிற்கேற்ப ஒரு சிறிய தொகையை (மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை) உங்கள் 60 வயது வரை சேமிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்களோ, அதேயளவு தொகையை மத்திய அரசும் உங்கள் கணக்கில் செலுத்தும்.
* அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தினக்கூலிகள், தெருவோர வியாபாரிகள், கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாயக்கூலிகள், முடிதிருததுபவர்கள், தையல் கலைஞர் மற்றும் சிறுதொழில் செய்பவர்கள் e-Shram அட்டை மூலம் இந்த சலுகைகளை பெற முடியும்.
பதிவு செய்யும் முறை :
* முதலில் இ-ஷ்ரம் அதிகாரப்பூர்வ தளமான https://eshram.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி மூலம் லாகின் செய்யவும்.
* உங்களது ஆதார் மற்றும் வங்கி விவரங்களையும் சரியாக பதிவிட வேண்டும்.
* பென்ஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் வங்கியில் இருந்து மாதமாதம் பணம் தானாகவே கழிக்கப்படும் ஆட்டோ டெபிட் வசதியை உறுதி செய்யுங்கள்.
* கடைசியாக இ-ஷ்ரம் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
* உங்களால் ஆன்லைனில் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் அருகில் உள்ள CSC(Common service centre) அல்லது இ- சேவை மையத்திற்கு சென்று எளிதாக பதிவு செய்யலாம்.
* இந்த கார்டில் 12 இலக்க எண் UAN எண் (Universal Account Number)வழங்கப்படும். இந்த எண் நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
இந்த e-Shram கார்டு ஆயுட்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என்பதால் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இது ஒரு சேமிப்பு சார்ந்த ஓய்யூதியத்திட்டமாகும். 60 வயதுக்கு பிறகு தான் இந்த ரூ.3000 உதவித்தொகை கிடைக்கும். இடையில் சந்தாதாரர் இறந்து விட்டால் அவரது மனைவி அல்லது கணவருக்கு 50 சதவீதம் பென்ஷன் தொடர்ந்து வழங்கப்படும்.
இது மிகச்சிறந்த சமூக பாதுகாப்பு திட்டமாகும். குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எனவே தகுதி உள்ள அனைவரும் மறக்காமல் உடனே விண்ணப்பிங்கள்.