

டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், தனிநபர் தகவல் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களை பலரும் பயன்படுத்தி வருவதால், இங்கிருந்து தான் தனிநபர் தகவல்கள் கசிவதாக மத்திய அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு தரவு விதிகளை மிகவும் கடுமையாக்கி உள்ளது மத்திய அரசு.
இதன்படி இனி தனிநபர் தகவல்களை பாதுகாக்க தவறினாலோ அல்லது வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்தாலும் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் தனிநபர் பாதுகாப்பு தரவுகள் குறித்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத தனிநபர் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அழிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனி நபர்களின் தரவுகளை பராமரித்து வரும் நிறுவனங்கள், அதனை எத்தனை காலத்திற்கு பராமரிக்க வேண்டும், இந்நிறுவனங்கள் பின்பற்றக்கூடிய விதிமுறைகள் என்னென்ன மற்றும் வெளிநாட்டு பரிமாற்றத்திற்கான நிபந்தனைகள் என்னென்ன என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அடுத்து வரும் 12 முதல் 18 மாதங்களுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. சமூக வலைதளங்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் உள்பட தனிநபர் தகவல்களை சேமித்து வரும் நிறுவனங்கள், 3 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இல்லாத தனிநபர் கணக்குகளை அழிக்க வேண்டும்.
2. இவ்வாறு தனிநபர் தகவல்களை அழிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபருக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
3. சில நிறுவனங்கள் தனிநபர் விபரங்களை ஸ்பேம் அழைப்புகளுக்கு விற்பனை செய்வதால், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி ஸ்பேம் அழைப்புகளுக்கு தகவல்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
4. தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறும் நிறுவனங்களுக்கும், அதனை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
தனிநபர் தகவுகளைப் பாதுகாக்க பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 2027 ஆம் ஆண்டு மே மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய விதிமுறையால், குடிமக்களுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களின் மீது கட்டுப்பாட்டை வழங்க உதவும். அதோடு, தனிநபர்களின் தரவுகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளவும், இணையதளங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கவும் இந்த புதிய விதிமுறைகள் உதவும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.