இதில் எது அசல்.. எது போலி... அசல் போலவே விற்கப்பட்ட போலி OnePlus, OPPO, Realme தயாரிப்புகள்..!

OPPO, OnePlus மற்றும் Realme தயாரிப்புகள் என்று போலி முத்திரையிட்டு பேக்கிங் செய்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
Fake OPPO, OnePlus phones
Fake OPPO, OnePlus phonesimage credit : AI Image
Updated on

டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் இரண்டு கிடங்குகளில் நடத்த சோதனையில், OPPO, OnePlus மற்றும் Realme தயாரிப்புகள் என்று போலி முத்திரையிட்டு பேக்கிங் செய்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சோதனையின்போது, போலி OPPO, OnePlus மற்றும் Realme தயாரிப்புகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவைச் சேர்ந்த போலீசார், ரெகர்புரா, கரோல் பாக் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு கிடங்குகள் மற்றும் மோதி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை என மூன்று இடங்களில் சோதனை நடத்தி, இரண்டு நபர்களைக் கைது செய்தனர். அவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் உபகரணங்களை தயாரித்து, அவற்றை OPPO, OnePlus மற்றும் Realme நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று கூறி விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் சீனாவிலிருந்து முத்திரையிடப்படாத மொபைல் உபகரணங்களை மொத்தமாக இறக்குமதி செய்து, பின்னர் அவற்றை OPPO, OnePlus மற்றும் Realme நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பெட்டிகளில் மீண்டும் பேக்கிங் செய்து சில்லறை சந்தைகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உஷார்! உங்கள் படுக்கையறை காட்சிகளை பார்க்கிறதா மெட்டா? ‘Ray Ban’ ஸ்மார்ட் கிளாஸ் குறித்த திடுக்கிடும் தகவல்கள்..!!
Fake OPPO, OnePlus phones

இந்தச் சோதனையின்போது, OPPO மற்றும் OnePlus லேபிள்கள் மற்றும் பெட்டிகளை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட பல அச்சு இயந்திரங்களையும் டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளூர் தயாரிப்புகளை பிராண்டட் சாதனங்களாக விற்று வந்துள்ளனர்.

இந்த சோதனையின் போது, OPPO, OnePlus மற்றும் Realme நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள், போலி பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங்கை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இயர்பட்ஸ், இயர்போன்கள், அடாப்டர்கள், பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் சாயத் தாள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையில் OPPO, OnePlus மற்றும் Realme நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து, கைப்பற்றப்பட்ட பொருட்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பாரத் ராம் மற்றும் கௌதம் குமார் என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான காது ஷ்யாம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு சாதனம் அசல் தானா என்பதை அடையாளம் காண்பது எப்படி?

சந்தையில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் துணைக்கருவிகளும் உண்மையானவை அல்ல என்பதை டெல்லி போலீசார் நடத்திய சோதனை எடுத்துக்காட்டுகிறது. சில பொருட்கள் போலியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் அல்லது துணைக்கருவி உண்மையானதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது?

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது மின்னணு துணைக்கருவியை(electronic accessory) வாங்குவதற்கு முன் நீங்கள் எடுக்கக்கூடிய பல முன்னெச்சரிக்கைகள் உள்ளன. உதாரணமாக, OPPO, OnePlus மற்றும் Realme போன்ற பிராண்டுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள விலைகளையும், உங்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதாக கூறப்படும் இடத்திலும் அந்த பொருட்களின் விலைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். போலிப் பொருட்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும், உண்மையான பொருளை வாங்க நினைத்தால், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள், அதிகாரப்பூர்வ பிராண்ட் கடைகள் அல்லது சரிபார்க்கப்பட்ட ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து துணைக்கருவிகளை வாங்குவது சிறந்தது.

பேக்கேஜிங்கின் தரம் மற்றொரு முக்கியமான அடையாளமாகும். உண்மையான பொருட்கள் துல்லியமான லோகோக்கள், சரியான முத்திரைகள் மற்றும் உயர்தர பேக்கேஜிங்கை கொண்டிருக்கும். அதேசமயம் போலிப் பொருட்களில் எழுத்துப்பிழைகள், மங்கிய நிறங்கள் அல்லது மோசமான வேலைப்பாடுகள் இருக்கலாம். இதன் மூலமும் நீங்கள் போலி எது உண்மையானது எது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மொபைலில் தோன்றும் பச்சை நிறப் புள்ளி: பாதுகாப்பா அல்லது ஆபத்தா? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!
Fake OPPO, OnePlus phones

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள், தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் வரிசை எண்கள், IMEI எண்கள் அல்லது QR குறியீடு அடிப்படையிலான சரிபார்ப்பு முறைகள் மூலம் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் கருவிகளையும் வழங்குகின்றன. ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு முன்பு இந்த விவரங்களை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com