

இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் நினைத்துக்கொள்ள முடியாது. தகவல் பரிமாற்றம் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்தும் நம் கைபேசியிலேயே நடக்கிறது. இந்த வசதி எவ்வளவு உதவிகரமோ, அதே அளவு அபாயங்களும் உள்ளன. குறிப்பாக, சில சிறிய அறிகுறிகளை நாம் கவனிக்காமல் விட்டால், நம் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் சிக்கக்கூடும். அந்தவகையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தங்கள் மொபைல் திரையில் அவ்வப்போது தோன்றும் ஒரு சிறிய பச்சை நிறப் புள்ளியை (Green Light) கவனித்திருக்கலாம். இது ஏன் தோன்றுகிறது? இது பாதுகாப்பிற்கானதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
உங்கள் மொபைல் திரையின் மேல் பகுதியில், வழக்கமாக பேட்டரி குறியீட்டிற்கு அருகில் ஒரு சிறிய பச்சை நிறப் புள்ளி தோன்றுவதை பார்த்திருப்போம்.
இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று நினைப்போம். ஆனால், இது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பயனர்களின் தனியுரிமையைப் (Privacy) பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்திய ஒரு சிறப்பு அம்சம்.
இந்த பச்சை நிறப் புள்ளி பொதுவாக இரண்டு விஷயங்களைக் குறிக்கிறது.
கேமரா பயன்பாடு (Camera Active): நீங்கள் புகைப்படம் எடுக்கும்போதோ, வீடியோ பதிவு செய்யும்போதோ அல்லது வீடியோ காலில் இருக்கும்போதோ இந்த விளக்கு எரியும்.
மைக்ரோஃபோன் பயன்பாடு (Microphone Active): நீங்கள் போனில் பேசும்போது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது இந்த விளக்கு தோன்றும்.
சுருக்கமாகச் சொன்னால், உங்கள் மொபைலின் கேமரா அல்லது மைக்ரோஃபோன் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான் இது.
இது எப்போது ஆபத்தாக மாறுகிறது?
நீங்கள் கேமராவையோ அல்லது மைக்ரோஃபோனையோ பயன்படுத்தாத நேரத்திலும் அந்தப் பச்சை நிறப் புள்ளி எரிந்து கொண்டிருந்தால், நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் எந்தச் செயலியையும் பயன்படுத்தவில்லை. நீங்கள் யாரிடமும் போனில் பேசவில்லை. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற கேமரா தேவைப்படும் செயலிகள் பின்னணியில் இயங்கவில்லை. எனினும் அந்தப் பச்சை விளக்கு எரிகிறது என்றால், உங்கள் மொபைலில் உள்ள ஏதோ ஒரு மர்மமான செயலி உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கேமரா மூலம் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இது ஹேக்கர்கள் அல்லது மால்வேர் தாக்குதலாகவோ இருக்கலாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நவீன ஆண்ட்ராய்டு போன்களில், அந்தப் பச்சை நிறப் புள்ளியைத் தொட்டாலே, தற்போது எந்த ஆப் கேமராவையோ அல்லது மைக்கையோ பயன்படுத்துகிறது என்பதைக் காட்டிவிடும். இதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயலியை உடனே கண்டறியலாம்.
உங்கள் போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, எந்தெந்த செயலிகளுக்கு கேமரா மற்றும் மைக்ரோஃபோன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சரிபார்க்கவும். தேவையில்லாத செயலிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனே 'Don't Allow' என மாற்றவும்.
உங்களுக்குத் தெரியாமல் இன்ஸ்டால் ஆன செயலிகள் அல்லது நீங்கள் அரிதாகப் பயன்படுத்தும் செயலிகள் கேமரா அனுமதியைக் கோரினால், அந்தச் செயலிகளை உடனடியாக நீக்குவது நல்லது.
தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் அபாயமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மொபைல் நிறுவனங்கள் வழங்கும் இத்தகைய சிறு சிறு பாதுகாப்பு அம்சங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மொபைலில் தோன்றும் அந்தச் சிறிய பச்சை நிறப் புள்ளியைச் சரியாகக் கவனிப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தடுத்து, பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.