ஸ்கரப் டைபஸ் பூச்சி கடிப்பதால் ஏற்படும் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த உண்ணிக் காய்ச்சல் குறித்து அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டிசம்பர் மாதம் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளை சேர்ந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், இந்த காய்ச்சல் பரவுவது குறையாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதற்காக அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில், தற்போது அடுத்தடுத்து 8 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இதுகுறித்து அந்த மாவட்ட சுகாதார அதிகாரி பேசியதாவது,” காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த காய்ச்சலிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகின்றனர். மேலும் ஒவ்வொரு கிராமமாக சென்று முகாம் அமைத்து நோய் தொற்று உள்ளவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த வகை காய்ச்சலால் 2, 3 நாட்களுக்கு ஒருவர் என பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் 8 பேர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறங்களை தூய்மையாக்குவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.” என்று பேசியிருக்கிறார்.
லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுமாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டு உயிரைப் பறிக்குமாம். இந்த லார்வாக்கல் கண்ணுக்குத் தெரியாமல் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த உண்ணிக் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவற்றை முதலில் உண்டாக்கும்.
பின்னர், நுரையீரல் அழற்சி, மூளைக் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.