

நாம் பயணம் செய்யும் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தவும், பராமரிக்கவும் அரசாங்கத்தால் சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் (Tollgate) வாகனங்களின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23-ம்தேதியில் இருந்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் (Toll Plazas) ரூ.25 முதல் ரூ. 100 வரை சுங்க கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், விலைவாசி உயரும் அபாயம் உள்ளதாகக் கூறி லாரி உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் சுங்ககட்டணம் குறைவாக செலுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளும் புதிய ஆப்பை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் வெளியிட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலயை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் சுங்ககட்டணம் குறைவாக செலுத்தலாம் என்பதை கண்டறியும் புதிய ஆப்பை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் வெளியிடவுள்ளது. அதன் பெயர் 'ராஜ்மார்க் யாத்ரா'. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் (Android) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (iOS) ஆகிய இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ள 'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) என்ற அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடத்திற்கு எந்த ரூட்டில் பயணித்தால் குறைவான சுங்க கட்டணம் செலவாகும் என்பதை கணக்கிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயனர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி, பயணத்தை எளிதாக்குவதே இந்த செயலியின் முக்கிய நோக்கமாகும்.
உதாரணமாக சென்னை டூ கோவை செல்ல வேண்டும் என்றால் 2 ரூட் இருக்கிறது. உளுந்தூர் பேட்டையிலிருந்து சேலம் வழியாகவும் செல்லலாம், கரூர் வழியாகவும் செல்லலாம். இந்த இரண்டு ரூட்டில் எந்த ரூட் வழியாக சென்றால் எவ்வளவு சுங்க கட்டணம் செலவாகும் என்ற தகவலை இந்த செயலி மூலம் பெறமுடியும். இதன் மூலம் நீங்கள் குறைந்த செலவு கொண்ட ரூட்டை தேர்வு செய்து பயணிக்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு சுங்க சாவடியிலும் ஒவ்வொரு வகையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதால் இதை கணக்கிடுவது சிரமமாக இருந்தது. இனி'ராஜ்மார்க் யாத்ரா'செயலி மூலம் நீங்கள் பயணிக்கும் இடத்திற்கு கிளம்பும் போதே எந்த ரூட்டில் பயணித்தால் குறைவாக செலவாகும் என்பதை கணக்கிட முடியும் என்பதால் பயண செலவுகளை முன்னரே துள்ளிமாக திட்டமிட வாய்ப்புள்ளது.
ராஜ்மார்க்யாத்ரா செயலி தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு அத்தியாவசியத் தகவல்களின் களஞ்சியமாக செயல்படுகிறது. லைவ் வானிலை, அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் கிடைக்கிறது.
இந்த செயலி, பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புகார் அளிக்கும் வசதி இருப்பதால், சிரமமின்றி புகாருக்கான தீர்வையும் பெறலாம். புகாரை மேலும் தெளிவாக தெரிவிக்க, அந்த இடத்தின் லோகேஷனை இணைத்து, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையும் இணைக்கலாம்.
மேலும் ராஜ்மார்க்யாத்ரா தனது சேவைகளை பல்வேறு வங்கி போர்ட்டல்களுடன் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் FASTag ரீசார்ஜ், மாதாந்திர பாஸ், FASTag தொடர்பான பிற வங்கிச் சேவைகளை அணுகவும் இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸை (ரூ.3,000) இதிலிருந்து எளிதாகப் பெறலாம்.
பாதுகாப்பான ஓட்டுநர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக, அதி வேகமாக சென்றால் அறிவிப்புகள் வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப் குரல் மூலமாக தகவல்களை கூறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தி உள்ள இந்த ராஜ்மார்க்யாத்ரா செயலி அடிக்கடி நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.